வந்தவாசியில் அதிகபட்சமாக 72 மில்லி மீட்டர் மழையளவு பதிவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த மழையில் அதிகபட்சமாக வந்வாசியில் 72 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது.

Update: 2022-11-12 17:02 GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த மழையில் அதிகபட்சமாக வந்வாசியில் 72 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது. மேலும் ஏரிகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டு உள்ளதால் 157 ஏரிகள் முழுகொள்ளளவை எட்டியுள்ளது.

தொடர் மழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியதில் இருந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகின்றது.

இந்த நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் கடந்த 11-ந்தேதி நள்ளிரவு முதல் திருவண்ணாமலை மாவட்டத்தில் மழை பெய்து வருகின்றது. நேற்று முன்தினம் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பகல் மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்தது. இந்த மழை தொடர்ந்து நேற்று காலை வரை நீடித்தது. இதையடுத்து ஆங்காங்கே லேசான சாரல் மழை பெய்தது. திருவண்ணாமலையில் மதியத்திற்கு மேல் வான மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்த தொடர் மழையினால் நேற்று முன்தினமும், நேற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த தொடர் மழையின் காரணமாக நேற்று மதியம் வரை மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கினர். மேடு, பள்ளமான சாலையில் மழைநீர் தேங்கி சேரும், சகதியுமாக காட்சி அளித்தது.

157 ஏரிகள் நிரம்பின

இந்த தொடர் மழையின் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டு உள்ளது. மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கீழ் 697 ஏரிகள் உள்ளன. இதில் நேற்றைய நிலவரப்படி 157 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பி உபரிநீர் வெளியேறியது. 75-ல் இருந்து 100 சதவீதம் வரை 72 ஏரிகளும், 50-ல் இருந்து 75 சதவீதம் வரை 100 ஏரிகளும், 25 முதல் 50 சதவீதம் வரை 263 ஏரிகளும் நிரம்பி உள்ளது. மீதமுள்ள 105 ஏரிகளுக்கு முறையான நீர்வரத்து ஏற்படாமல் 25 சதவீதத்திற்கு கீழ் நீர் நிரம்பி உள்ளது.

நேற்று முன்தினம் பெய்த மழையில் அதிகபட்சமாக வந்தவாசியில் 72.1 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது. மற்ற பகுதிகளில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

செய்யாறு-57, தண்டராம்பட்டு-44.1, வெம்பாக்கம்-43.6, கீழ்பென்னாத்தூர்-42.5, செங்கம்-41.8, சேத்துப்பட்டு-34.8, ஜமுனாமரத்தூர்-31.4, கலசபாக்கம்-27.6, ஆரணி-24.4, திருவண்ணாமலை-23.7, போளூர்-18 ஆகும்.

Tags:    

மேலும் செய்திகள்