சென்னை - கோவை வந்தே பாரத் ரெயிலில் பயணம் செய்த வானதி சீனிவாசன், சி.சரஸ்வதி...!
பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், சி.சரஸ்வதி ஆகியோர் வந்தே பாரத் ரெயிலில் பயணம் செய்த சம்பவம் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.;
சென்னை,
பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி நேற்று தமிழகம் வந்தடைந்தார். கோவையில் இருந்து சென்னைக்கு வரும் வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி துவங்கி வைத்தார்.
அதன்பின் சென்னை மயிலாப்பூரில் இருக்கும் ராமகிருஷ்ணா மடத்தின் 125வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டார். சென்னை விமான நிலையத்தில் இருக்கும் ஒருங்கிணைந்த புதிய டெர்மினல் 1 ஐ பிரதமர் மோடி திறந்து வைத்தார். சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ரூ.1260 கோடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முனையம் கட்டுமானத்திற்கு பின் நாள் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. சென்னைக்கு வரும் பயணிகள் எண்ணிக்கையை 23 மில்லியன் பயணிகள் என்ற அளவில் இருந்து 30 மில்லியன் பயணிகளாக உயர்த்தும்.
அதேபோல் சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு வந்தே பாரத் ரெயிலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். சென்னை முதல் பெங்களூர் வரை ஏற்கனவே வந்தே பாரத் ரெயில் சேவை உள்ளது. முதல் முறையாக தமிழ்நாடு உள்ளேயே வந்தே பாரத் ரெயில் சென்னை - கோவை இடையே திறக்கப்பட்டு உள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் 6 மணி நேரத்தில் கோவை சென்று விடலாம்.
இந்த ரெயில்கள் புதன்கிழமை தவிர வாரத்தின் பிற 6 நாட்களும் இருமார்க்கமாக இயங்க உள்ளது. சராசரியாக மணிக்கு 110 கி.மீ வேகத்தில் ரெயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதலில் 8 ஏசி பெட்டிகளுடன் இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. மொத்தம் 536 இருக்கைகள் இருக்கும். அதன்பிறகு பெட்டிகளின் எண்ணிக்கை 16 ஆக அதிகரிக்கப்படும். இதன் உட்புறம் பார்க்க உலகத்தரத்துடன் இருக்கும். முதல் நாளிலேயே இதில் பயணிக்க மக்கள் ஆர்வமாக டிக்கெட் புக் செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் இயக்கப்படும் இரண்டாவது வந்தே பாரத் ரயில் இது என்பதால் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. சாதாரணமாக இப்போதெல்லாம் ஆம்னி வாகனங்களும் கூட 6 மணி நேரத்தில் இதே ரூட்டில் செல்வதால், இதன் வேகத்தை இன்னும் அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. அதாவது இன்னும் வேகமாக 5 மணி நேரத்தில் செல்ல வழி ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
இந்தநிலையில், பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வந்தே பாரத் ரெயிலில் பயணம் செய்த சம்பவம் கவனம் பெற்றுள்ளது. சென்னை - கோவை வந்தே பாரத் ரெயிலில் பயணித்த அவர் சுற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள சேர் வசதியை பயன்படுத்தி அதை வீடியோ எடுத்துள்ளார். அவருடன் பாஜக எம்.எல்.ஏ சி.சரஸ்வதி உடன் இருந்தார். இவர்கள் ஒன்றாக அந்த சேரை சுற்றி அதை வீடியோ எடுத்து வெளியிட்டு உள்ளனர்.
அவர்களின் முகம் முழுக்க சிரிப்போடு, உற்சாகத்தோடு பயணம் செய்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.