திருமூர்த்தி அணையில் வண்டல் மண் அள்ளும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
திருமூர்த்தி அணை
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகின்ற பாலாற்றை தடுத்து செம்மண்ணை கொண்டு 3 அடுக்கு முறையில் 1967-ம் ஆண்டு திருமூர்த்தி அணை கட்டப்பட்டது. 60 அடி உயரம் கொண்ட இந்த அணைக்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகின்றன பாலாறு, உழுவி ஆறு, கொட்டையாறு, பாரப்பட்டி ஆறு குருமலைஆறு வண்டியாரு உப்புமண்ணம் ஓடை கிழவிபட்டி ஓடை உள்ளிட்ட ஆறுகள் ஓடைகள் நீராதாரமாக உள்ளது.
இந்த அணைகளுக்கும் திருமூர்த்தி அணைக்கும் காண்டூர் கால்வாய் இணைப்பு பாலமாக உள்ளது. இந்த கால்வாய் பரம்பிக்குளம் அணையில் தொடங்கி ஆனைமலை புலிகள் காப்பகத்தின் அடர்ந்த வனப்பகுதி வழியாக திருமூர்த்தி அணையை வந்தடைகிறது. அணைக்கு ஏற்பட்டுள்ள நீர்வரத்து மற்றும் நீர் இருப்பினை பொறுத்து கோவை,திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பி.ஏ.பி.பாசனத்திட்டத்தின் கீழ் பாசன வசதி பெற்று வருகிறது.
பழைய ஆயக்கட்டு பாசனத்தில் தளி மற்றும் வளையபாளையம் வாய்க்கால் மூலம் 3 ஆயிரத்து 44 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் அணையை ஆதாரமாகக் கொண்டு கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
வண்டல் மண் அள்ளும் பணி
அணைகட்டப்பட்ட பிறகு முறையாக தூர்வாரப்படாத அதன் நீர்ப்பரப்பில் சுமார் 20 சதவீதம் மண் தேங்கி உள்ளது. இதனால் நீர்த்தேக்க பரப்பளவும் படிப்படியாக குறைந்து வந்தது. அதைத்தொடர்ந்து விவசாயிகள் கோரிக்கை விடுத்ததின் பேரில் கடந்த 2017 மற்றும் 2019-ம் ஆண்டில் அணையில் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் பருவமழை குறுக்கிட்ட காரணத்தினால் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. ஆனாலும் அணையின் கிழக்குப்பகுதி மற்றும் தெற்குப்பகுதி ஓரளவிற்கு ஆழமானது. இதனால் நீர்த்தேக்க பரப்பளவும் சற்று உயர்ந்து வந்தது.
இதையடுத்து கோடை காலத்தில் அணையை தூர்வார வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. அதைத்தொடர்ந்து விவசாயிகள் பெருத்த போராட்டத்துக்குப்பிறகு அனுமதி பெற்று வண்டல் மண் அள்ளும் பணியை தொடங்கி உள்ளனர். இந்த நிலையில் பருவமழை தொடங்குவதற்கான சூழல் நிலவுவதால் பணி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் விரைந்து அனுமதி அளித்து இருந்தால் அணையும் ஆழமாகி இருக்கும். அதிகப்படியான தண்ணீரை தேக்கி வைப்பதற்கான வாய்ப்புகளும் ஏற்பட்டிருக்கும். அலட்சியம் காரணமாக நீர்த்தேக்க பரப்பளவு குறைந்து வருவது வேதனை அளிக்கிறது என்று விவசாயிகள் தெரிவித்தனர். வண்டல் மண் அள்ளும் பணியை பொதுப்பணித்துறையினர் கண்காணித்து வருகிறார்கள்.