3 டன் ரேஷன் அரிசியுடன் வேன் பறிமுதல்

திருமங்கலம் அருகே 3 டன் ரேஷன் அரிசி, வேனுடன் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-09-07 20:39 GMT

திருமங்கலம்

திருமங்கலம் அருகே 3 டன் ரேஷன் அரிசி, வேனுடன் பறிமுதல் செய்யப்பட்டது.

சோதனை

திருமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி பட்டை தீட்டி அதிக விலைக்கு ரேஷன் அரிசியை விற்பதாக அதிகாரிகளுக்கு தொடர்ந்து தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து பல்வேறு வாகன சோதனைகளை நடத்தி உணவு தடுப்பு அதிகாரி மற்றும் வட்டாட்சியர்கள் ரேஷன் அரிசி மூடைகளை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

இந்தநிலையில் திருமங்கலம் அருகே ஆலம்பட்டி, செங்கப்படை இடையே தேசிய நெடுஞ்சாலை பகுதியில் வட்டாட்சியர் சிவராமன் தலைமையில் சோதனை நடத்தினர். மேலும் அந்த வழியாக வந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது சரக்கு வேன் டிரைவர், அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதையடுத்து வருவாய் துறை அலுவலர்கள் சரக்கு வாகனத்தை சோதனை செய்தனர்.

3 டன் ரேஷன் அரிசி

அப்போது அதில் ரேஷன் அரிசி மூடைகள் இருப்பது தெரியவந்தது. 60 கிலோ எடையுள்ள 54 மூடைகள் இருந்தன. இவற்றின் மொத்த எடை 3 டன் ஆகும்.

வட்டாட்சியர் சிவராமன் ரேஷன் அரிசி மற்றும் சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்து அந்த வாகனத்தை திருமங்கலம் தாசில்தார் அலுவலகத்திற்கு கொண்டு வந்தார்.

தொடர்ந்து இப்பகுதியில் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சோதனையின் போது வட்ட வழங்கல் அலுவலர் வைரமணி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன் உள்பட பலர் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்