வேன் கவிழ்ந்து பெண் பலி; 16 பேர் படுகாயம்

திண்டிவனம் அருகே கோவிலுக்கு சென்றபோது வேன் கவிழ்ந்த விபத்தில் பெண் பரிதாபமாக இறந்தார். மேலும் 16 பேர் காயமடைந்தனர்.

Update: 2023-02-21 18:45 GMT

திண்டிவனம், 

சென்னை எண்ணூரில் இருந்து மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு 15-க்கும் மேற்பட்ட பக்தர்கள் நேற்று வேனில் புறப்பட்டனர். வேனை அதே பகுதியை சேர்ந்த இளங்கோ (வயது 21) என்பவர் ஓட்டினார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கூச்சிக்குளத்தூர் அருகே சென்றபோது வேனின் பின்பக்க டயர் திடீரென வெடித்தது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தறிக்கெட்டு ஓடி சாலையின் நடுவில் இருந்த தடுப்பு கட்டையில் மோதி கவிழ்ந்தது.

இந்த விபத்தில் வேனில் வந்த மச்சகாந்தி (55) என்ற பெண் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த தீபிகா (18), ராணி (65), அருள்மொழி (42), ராமு (37), சின்ன பொண்ணு (65), இலக்கியா (21), தேவிகா (33),அஞ்சலை (55) ஆகிய 8 பேர் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியிலும், மேலும் 8 பேர் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

போலீசார் விசாரணை

அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனிடையே இது குறித்த தகவலின் பேரில் ஒலக்கூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மச்சகாந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விபத்தில் சிக்கிய வேனை அங்கிருந்து அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக 6 மாத குழந்தை காயங்கள் இன்றி உயிர் தப்பியது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்