வேன் டிரைவர் குத்திக்கொலை

ஓசூரில் குடும்ப தகராறில் வேன் டிரைவரை குத்திக்கொலை செய்த உறவினரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2023-01-09 18:45 GMT

ஓசூர்

ஓசூரில் குடும்ப தகராறில் வேன் டிரைவரை குத்திக்கொலை செய்த உறவினரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

வேன் டிரைவர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேகேப்பள்ளியை சேர்ந்தவர் அன்னையப்பா. இவரது மகன் சென்னப்பா என்கிற சேகர் (வயது 37). வேன் டிரைவர். அதே பகுதியை சேர்ந்தவர் முனிராஜ் என்கிற விஜய் (25). இருவரும் அண்ணன்-தம்பி முறையிலான உறவினர்கள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முனிராஜ் மனைவி மதுவிற்கும், சென்னப்பாவின் தந்தை அன்னையப்பாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் சென்னப்பா, மதுவை கண்டித்துள்ளார். அதன்பிறகு வீட்டிற்கு வந்த தனது கணவர் முனிராஜிடம் நடந்த சம்பவங்களை மது கூறினார்.

குத்திக்கொலை

இதனால் ஆத்திரம் அடைந்த முனிராஜ் தான் வீட்டில் இல்லாத நேரத்தில் எப்படி எனது மனைவியை நீ கண்டிக்கலாம் எனக்கேட்டு சென்னப்பாவிடம் தகராறு செய்தார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த முனிராஜ், சென்னப்பாவை கத்தியால் வயிற்றில் குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த சென்னப்பா ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

பின்னர் முனிராஜ் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். ரத்த காயங்களுடன் கிடந்த சென்னப்பாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சென்னப்பா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி ரஞ்சினி ஓசூர் சிப்காட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

போலீஸ் வலைவீச்சு

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாவித்திரி மற்றும் போலீசார் தனியார் மருத்துவமனைக்கு சென்றனர். பின்னர் சென்னப்பாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சிப்காட் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய முனிராஜை வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஓசூர் பேகேப்பள்ளியில் குடும்ப தகராறில் வேன் டிரைவரை உறவினரே கத்தியால் குத்திக்கொலை செய்த பயங்கர சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்