சாலையோர தடுப்பு கட்டையில் வேன் மோதல்:பிரான்ஸ் நாட்டு குழந்தை உள்பட 2 பேர் பலி மேலும் 8 பேர் படுகாயம்

வானூர் அருகே சாலையோர தடுப்புக்கட்டையில் வேன் மோதியதில் பிரான்ஸ் நாட்டு குழந்தை உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-01-22 18:45 GMT


வானூர், 

புதுச்சேரி சாரம் பகுதியை சேர்ந்தவர்கள் சங்கர் (வயது 56), சுஜாதா (62), சுகுந்தன் (38). இவர்கள் 3 பேரும் பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்த தங்கள் உறவினர்களை அழைத்து வருவதற்காக வேனில் சென்னை விமான நிலையத்துக்கு சென்றனர். வேனை சாரம் பகுதியை சேர்ந்த துரை என்பவர் ஓட்டினார்.

பின்னர் அவர்கள், பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்த உறவினர்களான சுரேஷ் (60), தமிழரசி (59), விக்னேஸ்வரன் (35), அலுயன் (36), அவரது மனைவி வினோதினி (35), மகள் விநாலி (1½) ஆகியோரை அழைத்து கொண்டு புதுச்சேரி நோக்கி வந்தனர்.

தடுப்புக்கட்டையில் மோதியது

திண்டிவனம்- புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் கீழ்கூத்தபாக்கம் பகுதியில் வந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடியது. சாலையோரத்தில் இருந்த இரும்பு தடுப்புக்கட்டையில் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் இரும்பு தடுப்பு வேனின் முன்பகுதியில் சொருகி பின்பகுதியில் வெளியே வந்தது. இருப்பினும் அந்த வேன் இரும்பு தடுப்புடன் சுமார் 20 அடி தூரம் சென்று நின்றது. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் வேனில் வந்தவர்கள் அலறி கூச்சல் போட்டனர்.

இதையடுத்து அந்த வழியாக வந்தவர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் கிளியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். படுகாயங்களுடன் தவித்த டிரைவர் உள்பட 10 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

குழந்தை உள்பட 2 பேர் பலி

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்த சுரேஷ், குழந்தை விநாலி ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். தொடர்ந்து மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து கிளியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்த குழந்தை உள்பட 2 பேர் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்