வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில்மீண்டும் துவாரம் விழுந்தது
வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில்மீண்டும் துவாரம் விழுந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
ஸ்ரீவைகுண்டம்:
வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் மீண்டும் துவாரம் விழுந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
சேதமடைந்த உயர்மட்ட பாலங்கள்
தூத்துக்குடி- நெல்லை 4 வழிச்சாலையில் வல்லநாடு தாமிரபரணி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலங்கள் அருகருகே கட்டப்பட்டன. இந்த பாலங்களில் அடிக்கடி கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து துவாரம் விழுந்தது. இதையடுத்து சேதமடைந்த பாலங்களை சீரமைப்பதற்காக ரூ.13 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கியது.
அதன்படி முதல்கட்டமாக தென்புறம் உள்ள பாலம் மூடப்பட்டு, அதில் கான்கிரீட் பூச்சுகளை அகற்றி புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் வடபுறம் உள்ள மேம்பாலத்தின் வழியாக அனைத்து வாகனங்களும் செல்கின்றன.
மீண்டும் துவாரம் விழுந்தது
இந்த நிலையில் வடபுறம் உள்ள மேம்பாலத்தின் நடுவில் ஏற்கனவே சேதமடைந்த இடத்தின் அருகில் நேற்று காலையில் மீண்டும் துவாரம் விழுந்தது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்லாதவாறு தடுப்புகள் அமைத்து, அதன் அருகில் ஒருவழிப்பாதையில் அனைத்து வாகனங்களும் செல்ல ஏற்பாடு செய்தனர்.
இதனால் அந்த வழியாக வாகனங்கள் ஊர்ந்து சென்றதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. தொடர்ந்து சேதமடைந்த பாலத்தில் சீரமைக்கும் பணிகள் நடைபெற்றது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ''தூத்துக்குடி-நெல்லை 4 வழிச்சாலையில் வல்லநாடு தாமிரபரணி ஆற்றில் அமைக்கப்பட்ட உயர்மட்ட மேம்பாலங்கள் சேதமடைந்த நிலையில் உள்ளன. இந்த வழியாகத்தான் தூத்துக்குடி துறைமுகத்துக்கு ஏராளமான கன்டெய்னர் லாரிகள் சென்று வருகின்றன. பாலத்தில் சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றாலும் அடிக்கடி சேதமடைந்து துவாரம் விழுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே பாலத்தில் பயணிக்கின்றனர். எனவே, சேதமடைந்த பாலத்தை முறையாக சீரமைக்க வேண்டும்'' என்று தெரிவித்தனர்.