வல்லநாடு மலையில்புதிய வகை பல்லி இனம் கண்டுபிடிப்பு
வல்லநாடு மலையில் புதிய வகை பல்லி இனம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
நெல்லை அருகே வல்லநாடு மலையில் புதிய வகை பல்லி இனம்கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
வல்லநாடு மலையில் ஆய்வு
மராட்டிய மாநிலத்தை சேர்ந்த தாக்கரே வனவிலங்கு அறக்கட்டளை என்ற அமைப்பு இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் பல்லுயிரினங்களை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் அக்்ஷய் கந்தேகர் தேஜஸ் தாக்கரே தலைமையில் ஊர்வன பாதுகாப்பு ஆய்வாளர் ராமேசுவரன் மாரியப்பன் உள்ளிட்ட ஆராய்ச்சியாளர்கள் நெல்லை அருகே தூத்துக்குடி மாவட்ட எல்லையில் உள்ள வல்லநாடு மலைப்பகுதி, கோவில்பட்டி அருகே உள்ள குருமலை, மணக்கரை உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
புதிய பல்லி இனம்
அப்போது ஆராய்ச்சியாளர்கள் 'ஹெமிடாக்டைலஸ் குவார்ட்சிடிகோலஸ்' என்ற ஒரு புதிய வகை பல்லியை அடையாளம் கண்டு உள்ளனர். இது பல்லி இனங்களில் 53-வது இனம் ஆகும். இதில் 37 வகை பல்லிகள் இந்தியாவில் உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையில் 10 பல்லி இனமும், கிழக்கு தொடர்ச்சி மலையில் 2 பல்லி இனமும், தீபகற்ப இந்தியாவின் பிற பகுதிகளில் 25 பல்லி இனமும் உள்ளன.
தற்போது புதிய வாழிடத்தில் இந்த பல்லி இனம் கண்டறியப்பட்டு உள்ளது. இந்த பல்லிக்கு முத்துசெதில் பல்லி என்று பெயரிட்டு உள்ளனர். அதன் முதுகு, தொடை பகுதியில் முத்து போன்ற செதில்கள் காணப்படுகின்றன.
தனித்தன்மை வாய்ந்த செதில்கள்
இதுகுறித்து ஆராய்ச்சியாளர் ராமேசுவரன் மாரியப்பன் கூறியதாவது:-
வல்லநாடு மலைப்பகுதியில் முத்துசெதில் பல்லி என்ற புதிய வகை பல்லி கண்டறியப்பட்டு உள்ளது. இந்த வகை பல்லி தமிழ்நாடு முழுவதும் காணப்பட வாய்ப்பு உள்ளது. ஆனால் தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டுமே கண்டுபிடித்து உள்ளோம். இந்த பல்லிகள் வறண்ட பகுதிகளில் காணப்பட வாய்ப்பு உள்ளது. தமிழகத்துக்கு வெளியில் இருப்பதற்கான வாய்ப்பு கிடையாது.
இந்த வகை பல்லிகள் வீட்டில் காணப்படக்கூடிய பல்லி இனத்தை சேர்ந்தவைதான். ஆனால் அவை காடுகளில்தான் காணப்படுகின்றன. அவற்றின் உடலில் காணப்படக்கூடிய செதில்கள் தனித்தன்மை வாய்ந்தது. இது ஒரு புதிய இனமாக கண்டறியப்பட்டு உள்ளது. உலகில் வேறு எங்கும் இதை பார்க்க முடியாது. வல்லநாடு போன்ற பகுதியில் பெரிய அளவில் ஆராய்ச்சிகள் நடைபெறவில்லை. இங்கு தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடைபெறும்போது பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள் வெளிவரலாம். வல்லநாடு மலைப்பகுதி வாழத்தகுதியற்ற இடம் போன்று பார்க்கிறார்கள். ஆனால் அங்கு உள்ள சீதோஷ்ன நிலையை ஏற்று பல உயிரினங்கள் வாழ்கின்றன. குறிப்பாக ஊர்வன உயிரினங்கள் அதிகளவில் காணப்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.