திருவள்ளூரில் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக வள்ளலார் 200 முப்பெரும் விழா
திருவள்ளூரில் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக வள்ளலார் 200 முப்பெரும் விழா நடைபெற்றது.
ஆன்மிக புரட்சியாளராகவும் சமரச சன்மார்க்க ஞானியாகவும் விளங்கிய வள்ளலார் பிறந்த 200-வது ஆண்டு விழா, தருமசாலை தொடங்கிய 156-வது ஆண்டு விழா மற்றும் ஜோதி தரிசனம் காட்டுவித்த 152-வது ஆண்டு விழா ஆகியவற்றை சேர்த்து முப்பெரும் விழாவாக இந்து சமய அறநிலைத்துறை சார்பாக கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து திருவள்ளூரில் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக வள்ளலார் 200 முப்பெரும் விழா நடைபெற்றது.
இந்த விழாவுக்கு மாவட்ட கலெக்டர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கி வள்ளலாரின் கருத்துகளை அடியொற்றி அவரது கொள்கை நெறிகளை பரப்பிடும் சமரச சுத்த சன்மார்க்க சங்க பெரியோர்களை கவுரவித்தார். மேலும் வள்ளலார் குறித்து மாணவ-மாணவியரிடையே நடைபெற்ற கட்டுரைபோட்டி, ஓவிய போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
இதில் சமரச சுத்த சன்மார்க்க பிரதிநிதிகள், இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள், பணியாளர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.