புகை, துர்நாற்றத்தை பரிசாக கொடுக்கும் வலம்புரிவிளை குப்பை கிடங்கு
புகை மற்றும் துர்நாற்றத்தால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருவதால் வலம்புரிவிளை குப்பை கிடங்கை இடமாற்றம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
புகை மற்றும் துர்நாற்றத்தால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருவதால் வலம்புரிவிளை குப்பை கிடங்கை இடமாற்றம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
குப்பை கிடங்கு
நாகர்கோவில் மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் பீச்ரோடு வலம்புரிவிளையில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. வீடுகள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் ஒரே இடத்தில் கொட்டப்படுவதால் அங்கு குப்பைகள் பரந்து விரிந்து மலைபோல குவிந்து கிடக்கின்றன. முதலில் நாகர்கோவில் நகராட்சியாக உருவான போது ஊரின் ஒதுக்குப்புறமாக இருந்த வலம்புரிவிளை குப்பை கிடங்கு நாளடைவில் மக்கள் பெருக்கம் காரணமாக இன்றைக்கு நகரின் மையப்பகுதியில் குடியிருப்புகளின் நடுவில் வீற்றிருக்கிறது.
தற்போது குப்பை கிடங்கை சுற்றிலும் எண்ணற்ற குடியிருப்புகள் உள்ளன. குப்பை கிடங்கை ஒட்டி ஆஸ்பத்திரி, கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டு தலங்கள் அமைந்துள்ளன. அதோடு வாகன போக்குவரத்து நிறைந்த பகுதியாகவும் அந்த பகுதி உள்ளது.
தொடர் கதை
வலம்புரிவிளை குப்பை கிடங்கில் அடிக்கடி தீப்பிடிப்பதும், அதை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைப்பதும் தொடர் கதையாகி வருகிறது. வெயில் காலத்தில் தகிக்கும் வெப்பம் காரணமாக தானாகவே குப்பை கிடங்கில் தீப்பிடிக்கிறது. அதே சமயம் சமூக விரோதிகள் குடிபோதையில் குப்பைகளில் தீ வைத்து விடுவதாகவும் கூறுகிறார்கள்.
எது எப்படியோ குப்பை கிடங்கில் தீப்பிடித்து விட்டால் அதை அணைப்பது தான் பெரிய தலைவலியாக உள்ளது. குப்பை குவியலில் தீப்பிடித்த தகவல் கிடைத்த உடனேயே நாகர்கோவில் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று விடுவார்கள். ஆனால் தீயை அணைப்பது என்பது அங்கு சாதாரண விஷயம் இல்லை. தீயணைப்பு வீரர்களுக்கு பெரும் சவாலாகவே இருந்து வருகிறது.
ஏனெனில் குப்பை குவியலில் தீப்பிடித்து விட்டால் அதை அணைக்க குறைந்தது ஒரு வாரம் ஆகிவிடுகிறது. காலை 6 மணிக்கு தீயணைப்பு பணி தொடங்கினால் மாலையில் இருள் சூளும் வரை தீயணைப்பு பணியை மேற்கொள்ள வேண்டி உள்ளது. சுமார் 50 தீயணைப்பு வீரர்கள் இந்த பணியில் ஈடுபடுவார்கள். சுமார் 3 தீயணைப்பு வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்படும். அதோடு தீயை அணைக்க லாரி, லாரியாக தண்ணீர் கொண்டு வரப்பட்டு பீய்ச்சி அடிக்கப்படுகிறது. இதனால் தண்ணீர் விரயமும் ஏற்படும். தொடரும் தீயால் அங்கிருந்து வெளியேறும் புகை சுற்றுவட்டார பகுதி முழுவதும் சூழ்ந்திருக்கும். இந்த புகையால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். எனவே மாநகராட்சி குப்பை கிடங்கை உடனே இடமாற்றம் செய்ய வேண்டும் என்பது ஒட்டு மொத்த மக்களின் கோரிக்கையாக உள்ளது.
விஷ பூச்சிகள் படையெடுப்பு
இதுபற்றி குப்பைகிடங்கு அருகில் காய்கறி கடை நடத்தி வரும் முத்துகுமாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
வலம்புரிவிளை குப்பை கிடங்கில் திடீர் திடீரென தீப்பற்றுவது வழக்கமாக உள்ளது. அவ்வாறு தீப் பிடித்து விட்டால் உருவாகும் புகை காரணமாக நாங்கள் பெரிதும் அவதிப்படுகிறோம். குறிப்பாக தீப்பிடித்து விட்டால் சுற்று வட்டார பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. இதனால் மூச்சு திணறல் ஏற்படுகிறது. சுவாச கோளாறும் உண்டாகிறது. தீ வெப்பம் தாங்காமல் குப்பையில் மறைந்து வாழும் பாம்புகள் மற்றும் விஷ பூச்சிகள் வீட்டுக்குள் வந்து விடுகிறது. புகை காரணமாக பொதுமக்கள் அப்பகுதியை விட்டு வெளியேற வேண்டிய நிலை உள்ளதால் கடையில் வியாபாரம் பாதிக்கப்படுகிறது. வலம்புரிவிளை குப்பை கிடங்கை இடமாற்றம் செய்வோம் என்று தேர்தலின் போது அரசியல்கட்சிகள் வாக்குறுதி அளிக்கிறார்கள். ஆனால் சொல்வதை செய்வது இல்லை. எனவே இனிமேலாவது வலம்புரிவிளை குப்பை கிடங்கை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களின் நீண்ட நாளைய கோரிக்கை நிறைவேற்ற வேண்டும்.
துர்நாற்றம்
பாவலர் நகரை சேர்ந்த ராஜ்குமார் கூறியதாவது:-
வலம்புரிவிளை குப்பை கிடங்கில் தீப்பிடிக்கும் போது காற்று எந்த திசையில் வீசுகிறதோ அந்த பகுதி முழுவதையும் கரும்புகை ஆக்கிரமித்துக் கொள்கிறது. இதனால் வயதானவர்கள் வீட்டில் இருக்க முடியவில்லை. மூச்சு விடமுடியாமல் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். நோயாளிகளுக்கும் இதே நிலை தான். இதன் காரணமாக தீப்பிடிக்கும் சமயத்தில் முதியவர்களும், நோயாளிகளும் வேறு இடத்துக்கு செல்ல வேண்டி உள்ளது. அவர்கள் வேறு இடங்களில் உள்ள தங்களது உறவினர்கள் வீட்டில் தஞ்சம் அடைகிறார்கள். வெயில் காலத்தில் இப்படி என்றால் மழை காலத்தில் குப்பைகளில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. வீட்டில் இருக்க முடியாத அளவுக்கு நாற்றம் வீட்டுக்குள் வரை ஆக்கிரமிக்கிறது. மொத்தத்தில் நாங்கள் மழை பெய்தாலும் கஷ்டப்படுகிறோம். வெயில் அடித்தாலும் கஷ்டப்படுகிறோம். எனவே குப்பை கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதிகாரி தகவல்
வலம்புரிவிளை குப்பை கிடங்கில் உள்ள குப்பைகளை அகற்றுவது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
நாகர்கோவில் மாநகராட்சியில் 11 இடங்களில் உரம் தயாரிக்கும் மையம் செயல்பட்டு வருகிறது. தற்போது சேகரிக்கப்படும் குப்பைகள் அந்த மையங்களுக்கு தான் அனுப்பி வைக்கப்படுகிறது. அதுபோக மீதமுள்ள குப்பைகள் வலம்புரிவிளைக்கு கொண்டு செல்லப்படுகிறது. வலம்புரிவிளையில் இருந்து 30 ஆயிரம் சதுர மீட்டர் அளவுக்கு குப்பைகள் உரம் தயாரிக்கும் இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டு உரமாக மாற்றப்பட்டு உள்ளது. இதே போல அங்கு குப்பைகளை அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக நடக்கிறது. இதே வேகத்தில் நடந்தால் விரைவில் குப்பை கிடங்கு இருக்கும் இடமே தெரியாத அளவுக்கு மாறிவிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.