வைகுண்ட ஏகாதசி : திருப்பதியில் நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு...!

வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதியில் நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.

Update: 2023-01-01 04:22 GMT

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொரோனா பரவலால் 2 ஆண்டுகளுக்கு பிறகு வைகுண்ட ஏகாதசி வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி நாளை அதிகாலை 1.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.

அதிகாலை 2 மணி முதல் 5 மணி வரை அதிகாரிகள் விஐபி தரிசனத்தில் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். அதன் பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். தொடர்ந்து வரும் 11-ம் தேதி இரவு 12 மணி வரை சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான அதிகாரிகள் செய்துள்ளனர்.

எந்தவித டிக்கெட் இல்லாத பக்தர்கள் திருமலைக்கு அனுமதிக்கப்பட்டாலும் திருமலையில் உள்ள மற்ற பகுதிகளை சுற்றி பார்க்க செல்லலாம். ஆனால் எக்காரணத்தை கொண்டும் ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் வழியாக சென்று சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்க முடியாது என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் வழியாக சுவாமி தரிசனம் செய்வதற்காக நாளை முதல் 11ம் தேதி வரையிலான பத்து நாட்களுக்கு உண்டான இலவச டோக்கன்கள் திருப்பதியில் பிரத்யேகமாக 9 இடங்களில் அமைக்கப்பட்ட 96 கவுன்டர்களில் 4 லட்சத்து 50 ஆயிரம் டோக்கன்கள் வழங்கப்பட உள்ளது. இந்த டோக்கன்களை பெறும் பக்தர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட தேதியில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

சொர்க்கவாசல் தரிசனத்துக்கு இலவச டோக்கன்களை பெறுவதற்காக வரும் பக்தர்கள் சிரமமின்றி அந்தந்த கவுன்டர்களுக்கு செல்லும் விதமாக திருப்பதி நகரின் பல்வேறு இடங்களில் இலவச டோக்கன்கள் வழங்கும் கவுன்டர்களுக்கு செல்லும் விதமாக கியூஆர் கோடு விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அந்த க்யூஆர் கோடு ஸ்கேன் செய்து அருகில் உள்ள இலவச கவுன்டர் மையத்திற்கு சென்று டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளும் விதமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்