பெரம்பலூரில் வைகோ ஆவணப்படம் திரையிடப்பட்டது

பெரம்பலூரில் வைகோ ஆவணப்படம் திரையிடப்பட்டது.

Update: 2022-09-29 19:56 GMT

ம.தி.மு.க. நிறுவன பொதுச்செயலாளர் வைகோவின் மகனும், கட்சியின் தலைமை கழக செயலாளருமான துரை வைகோ இயக்கியுள்ள மாமனிதன் வைகோ வரலாற்று ஆவணப்படம் நேற்று பெரம்பலூரில் ராஜா திரையரங்கத்தில் திரையிடப்பட்டது. இதற்கு கட்சியின் உயர்நிலைக்குழு உறுப்பினரும், அரியலூர் மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான கு.சின்னப்பா தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்து கொண்டு வைகோவின் ஆவணப்படத்தை பார்த்து விட்டு பேசும் போது, ஆவணப்படத்தின் மூலம் வைகோவின் பல்வேறு வரலாறுகள் தெரிய வந்துள்ளது. எதிர்காலத்தில் நாம் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு கொள்கை பாடமாக வைகோவின் வரலாற்று ஆவணப்படம் அமைந்துள்ளது. ஆவணப்படத்தின் அடுத்தடுத்த தொகுப்புகள் வர வேண்டும் என்று தெரிவித்தார்.

ம.தி.மு.க. தலைமை கழக செயலாளர் துரை வைகோ பேசும்போது தமிழ்நாட்டின் கலாசாரத்தை உருக்குலைக்கும் வகையில் நாள்தோறும் சதி திட்டம் தீட்டும் இந்த சனாதான சக்திகளை சுட்டெரிக்கும் இரட்டை குழல் துப்பாக்கிகளாக இயங்க போவது ம.தி.மு.க., தி.மு.க. இயக்கங்கள். இந்த ஆவணப்படத்தை பார்த்த கட்சியின் நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் புதிய உத்வேகத்தை கொடுத்துள்ளது என்று தெரிவித்தார். பின்னர் துரை வைகோ நிருபர்களிடம் கூறுகையில், வைகோவின் வரலாற்று ஆவணப்படத்தை முழு நேர திரைப்படமாக எடுப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்படும். தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு போலீசார் அனுமதி மறுத்திருப்பது வரவேற்கத்தக்கது. எனது தந்தை போல் தமிழக மக்களுக்காக நாடாளுமன்றத்தில் போராடுவதற்கு கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் விரும்பி, எனக்கு அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் சந்தோஷம் தான். வருகிற 2-ந்தேதி காந்தி ஜெயந்தியன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக சமூக ஒற்றுமை நல்லிணக்க மனித சங்கிலி பேரணியில் ம.தி.மு.க.வும் பங்கேற்கும் என்றார்.

இதில் தோழமை கட்சியின் முன்னனி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக கட்சியின் மாநில விவசாய அணி துணைச்செயலாளர் ராஜேந்திரன் வரவேற்றார். முடிவில் கட்சியின் மாவட்ட பொருளாளர் ஜெயசீலன் நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட ம.தி.மு.க.வினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்