திருச்செந்தூர் கோவிலில் வெள்ளிக்கிழமை வைகாசி விசாக திருவிழா

திருச்செந்தூர் கோவிலில் வெள்ளிக்கிழமை வைகாசி விசாக திருவிழா கொண்டாடப்படுகிறது. இதைமுன்னிட்டு பாதயாத்திரை பக்தர்கள் கோவிலில் குவிந்துள்ளனர்.

Update: 2023-06-01 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. விழாவையொட்டி கோவிலில் பாதயாத்திரை பக்தர்கள் குவிந்தனர்.

வைகாசி விசாக திருவிழா

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. முருக பெருமான் அவதரித்த தினமான இன்று அவரை வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

வைகாசி விசாக திருவிழாவையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலையில் உச்சிகால அபிஷேகம், தீபாராதனை, மாலையில் சாயரட்சை தீபாராதனை, இரவில் ராக்கால அபிஷேகம் நடந்தது.

சாப விமோசனம்

வைகாசி விசாக திருநாளான இன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. காலை 10.30 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகம், சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.

மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் வசந்த மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு முனிகுமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 7.15 மணிக்கு ராக்கால அபிஷேகம் நடக்கிறது.

பாதயாத்திரை பக்தர்கள்

விழாவையொட்டி தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். பல்வேறு ஊர்களில் இருந்தும் திரளான பக்தர்கள் பாத யாத்திரையாகவும், அலகு குத்தியும், காவடி எடுத்தும் வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுகின்றனர்.

நாளை (சனிக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது. காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது. மாலையில் சாயரட்சை தீபாரதனையும், இரவு 7.15 மணிக்கு ராக்கால அபிஷேகமும் நடக்கிறது.

பக்தர்களின் பாதுகாப்பு கருதி 650-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், ராமதாஸ், கணேசன், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்