பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா

பழனி முருகன் கோவிலில், வைகாசி விசாக திருவிழா வருகிற 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

Update: 2023-05-23 19:00 GMT

வைகாசி விசாக திருவிழா

கலியுக கடவுளான முருகப்பெருமானின் ஒவ்வொரு நிகழ்வும் ஒரு திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி அனைத்து முருகன் கோவில்களிலும் கொண்டாடப்படும் விழாக்களில் வைகாசி விசாக திருவிழாவும் ஒன்று.

உலக உயிர்களின் இன்னல்களை அழிக்க, வைகாசி மாதத்தில் பவுர்ணமியையொட்டி வரக்கூடிய விசாக நட்சத்திரத்தில் முருகப்பெருமான் அவதரித்த நாளே வைகாசி விசாக திருநாளாகும்.

சிறப்பு வாய்ந்த இத்திருவிழா, பழனி முருகன் கோவிலில் வருகிற 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்றைய தினம் பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் காலையில் விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், கொடிபட பூஜை நடக்கிறது. இதையடுத்து காலை 11.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது.

திருக்கல்யாணம்

10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினசரி காலையில் தந்தப்பல்லக்கில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருவுலாவும், இரவில் வெள்ளியால் ஆன காமதேனு, ஆட்டுக்கிடா, யானை, பிடாரி மயில் மற்றும் தங்கமயில், தங்கக்குதிரை, புதுச்சேரி சப்பரம் போன்ற வாகனங்களில் சுவாமி புறப்பாடும் நடைபெறுகிறது.

விழாவின் 6-ம் நாளான ஜூன் 1-ந்தேதி இரவு 7.15 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணமும், பின்னர் வெள்ளி மயில் வாகனத்தில் திருவுலாவும் நடைபெறுகிறது.

தேரோட்டம்

7-ம் நாளான ஜூன் 2-ந்தேதி வைகாசி விசாக தினத்தன்று பெரியநாயகி அம்மன் கோவிலில், முத்துக்குமாரசுவாமி தோளுக்கினியான் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதையடுத்து காலை 9 மணிக்கு திருத்தேரேற்றமும், மாலை 4.30 மணிக்கு தேரோட்டமும் நடைபெறுகிறது. பின்னர் இரவில் பெரிய தந்தப்பல்லக்கில் தேர்க்கால் பார்த்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

10-ந்தேதி கொடி இறக்குதல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவையொட்டி தினமும் மாலை 6.30 மணிக்கு சிறப்பு சமய சொற்பொழிவு, இன்னிசை, நாட்டியம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் நடராஜன், துணை ஆணையர் பிரகாஷ் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்