வைகாசி விசாக திருவிழாவையொட்டி தேரோட்டம்

வைகாசி விசாக திருவிழாவையொட்டி தேரோட்டம் நடந்தது.

Update: 2022-06-11 20:58 GMT

திருச்சி:

பஞ்சவர்ணசுவாமி கோவில்

திருச்சி உறையூரில் பழமைவாய்ந்த காந்திமதியம்மை உடனுறை பஞ்சவர்ணசுவாமி கோவிலில் வைகாசி விசாக தேர்த்திருவிழா கடந்த 3-ந்தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினமும் சுவாமி, அம்பாள் வீதி உலா நடைபெற்றது. கடந்த 9-ந்தேதி திருக்கல்யாணம் நடைபெற்றது. நேற்று திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி காலை 7 மணிக்கு தேர் வடம் பிடிக்கப்பட்டது. சிவனடியார்கள் பஞ்சவாத்தியம் வாசித்து முன்னே செல்ல, தேர் நான்கு ரத வீதி வழியாக வலம் வந்து நிலையை அடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

இதைத்தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு நடராஜர் புறப்பாடும், 10 மணிக்கு தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. மாலையில் ரிஷப வாகன புறப்பாடு, துவஜா அவரோகனம் வீதி புறப்பாடு நடைபெறுகிறது. நாளை (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு பஞ்சமூர்த்திகளுக்கு பிராயசித்த அபிஷேகம், விடையாற்றி உற்சவம் நடைபெறுகிது. நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) பிஷாடனர் திருக்கோலத்தில் திருவீதி உலா நடைபெறுகிறது.

உத்தமர் கோவில்

திருச்சி நெ.1 டோல்கேட் அருகே பிச்சாண்டார்கோவில் கிராமத்தில் மும்மூர்த்திகள் முப்பெரும் தேவிகளுடன் எழுந்தருளி அருள்பாலிக்கும் உத்தமர் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி தேர்த்திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினமும் ஒவ்வொரு வாகனத்தில் பிச்சாண்டேஸ்வரர் வீதி உலா வந்தார். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி காலை 8 மணிக்கு பிச்சாண்டேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, தீபாராதனை காட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து சவுந்தர்யபார்வதி சமேதராக பிச்சாண்டேஸ்வரர் ேதரில் எழுந்தருளினார். இதையடுத்து ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் கோவிலை சுற்றி தேரோடும் வீதியில் வலம் வந்து நிலையை அடைந்தது.

மாற்றுரைவரதீஸ்வரர் கோவில்

மண்ணச்சநல்லூர் அருகே திருவாசி கிராமத்தில் உள்ள பாலாம்பிகை சமேத மாற்றுரைவரதீஸ்வரர் கோவில் வைகாசி பிரம்மோற்சவ விழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, தினமும் சுவாமி வீதி உலா நடந்தது. இதைத்தொடர்ந்து நேற்று காலை தேரோட்டம் நடந்தது. இதையொட்டி காலை 8 மணிக்கு சிறப்பு பூஜைகளை தொடர்ந்து மாற்றுரைவரதீஸ்வரரை தேரில் எழுந்தருள செய்து, ஓம் சிவாய... நமசிவாய... கோஷம் முழங்க பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதி வழியாக சென்று அதன் நிலையை அடைந்தது.

43 ஆண்டுகளுக்கு பிறகு...

திருச்சி பெட்டவாய்த்தலை மத்யார்ஜீனேஸ்வரர் கோவில் வைகாசி விசாக தேர் திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய விழாவான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. காலை 8.15 மணிக்கு சுவாமி புறப்பாடு செய்யப்பட்டு தேரில் வீற்றிருந்தார். இதைத்தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

இந்த கோவிலில் கடந்த 1979-ம் ஆண்டு தேர்த்திருவிழா நடைபெற்றது. பின்னர் தேர் பழுதடைந்த காரணத்தால் 43 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறவில்லை. தற்போது தேர் புதுப்பிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று தேரோட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

அனலாடீஸ்வரர் கோவில்

தொட்டியத்தில் திரிபுரசுந்தரி உடனுறை அனலாடீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைதொடர்ந்து சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து சோமாஸ்கந்தர், இந்து வள்ளி தாயார் திருமண வைபவம் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையடுத்து தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் இழுத்து வந்து கோவில் நிலையை வந்தடைந்தனர். இதில் தொட்டியம், பாலசமுத்திரம், சீனிவாசநல்லூர், கொசவம்பட்டி உள்ளிட்ட பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்