கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது.

Update: 2022-06-03 10:05 GMT


பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் பத்து நாட்கள் விசாக பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக பெருந்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக நேற்று மாலை கோட்டார் இளங்கடை பட்டாரியர் சமுதாய ருத்ர பதி விநாயகர் செவ்விட்ட சாஸ்தா டிரஸ்ட் சார்பில் கொடிப்பட்டம் மரபுப்படி விவேகானந்தபுரம் சந்திப்பில் இருந்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலில் சமர்ப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரவு 7 மணிக்கு மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டான நிகழ்ச்சியாக கன்னியாகுமரி கிறிஸ்தவ மீனவர் சார்பாக கொடிமர கயிறு மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலில் சமர்ப்பிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இன்று காலை 9 மணிக்கு கொடியேற்று நிகழ்ச்சி தொடங்கியது. கொடிப்பட்டம் வெள்ளி பல்லக்கில் வைத்து பஞ்ச வாத்தியங்கள் முழங்க கோவிலின் உள் பிரகாரத்தை மூன்றுமுறை வலம் வரச் செய்து பின்னர் கொடிமரத்திற்கு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடந்தது. அதனைத் தொடர்ந்து 9.30 மணிக்கு பஞ்ச வாத்தியங்கள் முழங்க திருக்கொடி ஏற்றப்பட்டது.

மாத்தூர் தந்திரி சங்கரநாராயணரு கொடி ஏற்றி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி எம்.எல்.ஏ தளவாய்சுந்தரம், அதிமுக ஒன்றிய அவைத்தலைவர் தம்பி தங்கம், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளர் சிவகுமார், கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவில் மேலாளர் ராமச்சந்திரன், பொருளாளர் ரமேஷ் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருவிழா நாட்களில் தினமும் அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, பகல் 12 மணிக்கு சிறப்பு அன்னதானம், இரவு 9 மணிக்கு அம்மன் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வருதல் ஆகியவை நடக்கிறது.

விழாவில் 11-ம் தேதி காலை 7 மணிக்கு தேரோட்டம், பகல் 12 மணிக்கு அன்னதானம், இரவு 9 மணிக்கு வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மன் வீதியுலா வருதல் 12-ம் தேதி காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு, இரவு 9 மணிக்கு தெப்பத் திருவிழா,11 மணிக்கு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி ஆகியவை நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்