சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் வைகாசி தேர் திருவிழா

சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் வைகாசி தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.;

Update: 2022-06-05 18:15 GMT

சேலம்:

கொடியேற்றம்

சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை பெருமாள் கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் தேர்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். கொரோனா பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக வைகாசி திருவிழா நடத்தப்படவில்லை.

இந்தாண்டு வைகாசி தேர் திருவிழா நேற்று கொடியேற்றுத்துடன் தொடங்கியது. கொடிக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஸ்ரீதேவி, பூதேவியுடன் அழகிரிநாதருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மாலை 6 மணிக்கு அன்ன வாகனத்தில் சாமி வீதி உலா நடந்தது.

13-ந் தேதி தேரோட்டம்

இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 12-ந் தேதி வரை தினமும் காலை 8 மணிக்கு வெள்ளி பல்லக்கில் வீதி உலாவும், மாலையில் பல்வேறு வாகனத்தில் சாமி ஊர்வலம், சிறப்பு பூஜையும் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா வருகிற 13-ந் தேதி நடக்கிறது.

அன்று காலை 5.45 மணிக்கு கோவிலில் இருந்து தேர் மண்டபத்திற்கு சாமி செல்லுதலும், 9 மணிக்கு தேரோட்டமும் நடக்கிறது. 14-ந் தேதி காலை 10.30 மணிக்கு தீர்த்தவாரி உற்சவம், 15-ந் தேதி இரவு 7 மணிக்கு சத்தாபரணம், 16-ந் தேதி மாலை 6 மணிக்கு வசந்த உற்சவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்