சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் வைகாசி விசாக தேரோட்டம் 13-ந் தேதி நடக்கிறது
சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் வைகாசி விசாக தேரோட்டம் வருகிற 13-ந் தேதி நடைபெற உள்ளது.
சேலம்,
கோட்டை பெருமாள் கோவில்
சேலம் பழைய பஸ்நிலையம் அருகே பிரசித்தி பெற்ற கோட்டை பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகாசி விசாக தேர்த்திருவிழா வருகிற 13-ந் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு நேற்று மாலை 6 மணிக்கு சேனாதிபதி உற்சவம், ஸ்ரீமுகம் வாசித்தல், அங்குரார்ப்பணம் உள்ளிட்டவை நடைபெற்றது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு புஷ்ப பல்லக்கில் சாமி புறப்பாடு, 11.30 மணிக்கு கொடியேற்றம் ஆகியவை நடைபெறுகிறது. மேலும் நாளை (திங்கட்கிழமை) முதல் 12-ந் தேதி வரை தினமும் காலை 8 மணிக்கு வெள்ளி பல்லக்கில் சாமி திருவீதி உலாவும் மற்றும் மாலையில் பல்வேறு வாகனத்தில் சாமி ஊர்வலமும் நடக்கிறது.
13-ந் தேதி தேரோட்டம்
வருகிற 13-ந் தேதி காலை 5.45 மணிக்கு கோவிலில் இருந்து தேர் மண்டபத்துக்கு செல்லுதல், தொடர்ந்து காலை 9 மணிக்கு தேரோட்டமும், மதியம் வண்டிக்கால உற்சவமும் நடைபெற உள்ளது. 14-ந் தேதி காலை 10.30 மணிக்கு தீர்த்தவாரி உற்சவமும், 15-ந் தேதி இரவு 7 மணிக்கு சத்தாபரணமும் நடைபெறுகிறது.
தேர்த்திருவிழாவை முன்னிட்டு ராஜகணபதி கோவில் அருகே நிறுத்தப்பட்டிருக்கும் கோட்டை பெருமாள் கோவில் தேருக்கு ஊழியர்கள் கம்புகள் கட்டி தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.