வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் 16-ந் தேதி முதல் ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும்

வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் 16-ந் தேதி முதல் ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-09-07 20:15 GMT

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மை தலமாக விளங்கி வருகிறது. இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமின்றி வடமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்துக்காக வருகிறார்கள். இதனால் ஸ்ரீரங்கம் ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்லும். இந்தநிலையில் மதுரை-சென்னை இடையே இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் மட்டும் ஸ்ரீரங்கம் ரெயில் நிலையத்தில் நிற்காமல் சென்று வந்தது. வைகை எக்ஸ்பிரஸ் ஸ்ரீரங்கத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்தநிலையில் வண்டி எண் 12635 மற்றும் 12636 சென்னை-மதுரை -சென்னை இடையே இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் வருகிற 16-ந் தேதி முதல் பரீட்சார்த்த அடிப்படையில் ஸ்ரீரங்கம் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல தென்னக ரெயில்வே உத்தரவிட்டுள்ளது. அதன்படி இந்த ரெயில் சென்னை எழும்பூரில் இருந்து பகல் 1.50 மணிக்கு புறப்பட்டு, மாலை 6.05 மணிக்கு ஸ்ரீரங்கம் ரெயில் நிலையம் வந்து, 6.07 மணிக்கு புறப்பட்டு செல்லும். இதேபோல் மறுமார்க்கத்தில் மதுரையில் இருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு காலை 9.36 மணிக்கு ஸ்ரீரங்கம் ரெயில் நிலையம் வந்து, 9.38 மணிக்கு புறப்பட்டு செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேபோல் வண்டி எண் 12653 மற்றும் 12654 சென்னை-திருச்சி-சென்னை இடையேயான மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் கல்லக்குடி பழங்கானத்தம் ரெயில் நிலையத்தில் வருகிற 16-ந் தேதி முதல் பரீட்சார்த்த அடிப்படையில் இரு மார்க்கத்திலும் நின்று செல்லும். வண்டி எண் 16231 மற்றும் 16232 மயிலாடுதுறை-மைசூரு-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 16-ந் தேதி முதல் கரூர் மாவட்டம், புகழூர் ரெயில் நிலையத்தில் பரீட்சார்த்த அடிப்படையில் இரு மார்க்கத்திலும் நின்று செல்லும்.

Tags:    

மேலும் செய்திகள்