வடமாடு மஞ்சுவிரட்டு; 10-க்கும் மேற்பட்ட வீரர்கள் காயம்
அரிமளம் அருகே வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் 10-க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர்.
வடமாடு மஞ்சுவிரட்டு
அரிமளம் அருகே கீழப்பனையூர் தெற்கு குடியிருப்பு கிராமத்தில் அடைக்கல மாதா ஆலய புனித அந்தோணியார் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு இன்று வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் மதுரை, ராமநாதபுரம், திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 12 காளைகள் பங்கேற்றன. இதில் 3 மாடுகளை மட்டுமே வீரர்கள் அடக்கி பரிசு பெற்றனர்.
ஒவ்வொரு காளையையும் அடக்க 9 வீரர்கள் கொண்ட குழுவினர் களமிறங்கினர். ஒரு காளையை அடக்க 25 நிமிடங்கள் நேரம் ஒதுக்கப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் 9 பேர் கொண்ட குழுவை சேர்ந்த வீரர்கள் காளையை அடக்க முடியவில்லை என்றால் காளை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதேசமயம் குறிப்பிட்ட நேரத்திற்குள் காளையை வீரர்கள் அடக்கி விட்டால் மாடுபிடி வீரர்கள் வெற்றி பெற்றதாக வீரர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
10-க்கும் மேற்பட்டவர்கள் காயம்
காளைகளை சில குழுவினர் போட்டிப்போட்டு அடக்கினா். சில காளைகள் மாடுபிடி வீரர்கள் பிடியில் சிக்காமல் வீரர்களை திக்குமுக்காடச் செய்து பரிசுகளை வென்றது. இதில் வெற்றி பெற்ற குழுவினருக்கு ரொக்க பரிசு ரூ.5 ஆயிரம் உள்ளிட்ட சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.
மாடுகளை அடக்க முயன்றபோது 10-க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்த வீரர்களுக்கு அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ குழுவினர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதில் 3 வீரர்கள் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வடமாடு மஞ்சுவிரட்டை சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர்.