திருப்பத்தூரில் வடமாடு மஞ்சுவிரட்டு
கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி திருப்பத்தூரில் வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது. காளைகள் முட்டியத்தில் 5 பேர் லேசான காயம் அடைந்தனர்.
மஞ்சுவிரட்டு
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே காட்டாம்பூர் பகுதியில் தி.மு.க. ஒன்றிய, நகரத்தின் சார்பில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நேற்று வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. மஞ்சுவிரட்டிற்கு, தி.மு.க. சிவகங்கை மாவட்ட செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான கே.ஆர்.பெரியகருப்பன் தலைமை தாங்கினார். விழாவில், முன்னாள் அமைச்சர் தென்னவன், திருப்பத்தூர் தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளரும், யூனியன் சேர்மனுமான சண்முகவடிவேல், திருப்பத்தூர் பேரூராட்சி சேர்மன் கோகிலாராணி, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் கே.எஸ்.நாராயணன், நகர செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போட்டியில் சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மொத்தம் 16 காளைகள் களம் இறக்கப்பட்டது. இதில் ஒரு காளையை அடக்க 9 மாடுபிடி வீரர்கள் களமிறக்கப்பட்டனர்.
5 பேர் காயம்
ஒரு மாட்டிற்கு களத்தில் 25 நிமிடங்கள் அவகாசம் கொடுக்கப்பட்டது. நிகழ்ச்சியின்போது காளைகள் முட்டியதில் 5 பேர் லேசான காயமடைந்தனர். வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் குத்துவிளக்கு, சேர், ரொக்கம் போன்றவை பரிசாக வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் முகமதுகனி, பேரூராட்சி துணை சேர்மன் கான்முகமது, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் தமிழ்நம்பி, ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் சோமசுந்தரம், மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் சுப்பையா ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு ஹரி, மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.