தர்மபுரி மாவட்டத்தில் கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம்-வருகிற 14-ந் தேதி வரை நடக்கிறது

Update: 2023-02-02 18:45 GMT

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் கோழிகளுக்கு ஏற்படும் வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் வருகிற 14-ந் தேதி வரை நடக்கிறது.

இது தொடர்பாக தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

வெள்ளை கழிச்சல் நோய்

தர்மபுரி மாவட்டத்தில் கிராம பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் நாட்டின கோழிகளுக்கும் மற்ற கோழிகளுக்கும் கோடை காலங்களில் வெள்ளை கழிச்சல் நோய் ஏற்பட்டு, அவை இறக்க நேரிடுகிறது.

கோழிகளுக்கு ஏற்படும் வெள்ளை கழிச்சல் நோயை கட்டுப்படுத்த கால்நடை பராமரிப்பு துறை மூலம் வாரத்திற்கு ஒருமுறை கால்நடை மருந்தகங்களிலும், 15 நாட்களுக்கு ஒரு முறை கால்நடை மருத்துவ கிளை நிலையங்களிலும், கால்நடை பாதுகாப்பு திட்ட முகாம்களிலும் தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

14-ந் தேதி வரை முகாம்

இருந்தபோதும் கோடை காலத்தில் வெள்ளை கழிச்சல் நோய் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இலவசமாக வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம்கள் அனைத்து கிராமங்களிலும் தொடங்கப்பட்டுள்ளன. வருகிற 14-ந் தேதி வரை கால்நடை பராமரிப்பு துறையில் பணிபுரியும் கால்நடை உதவி மருத்துவர்கள் மற்றும் கால்நடை ஆய்வாளர்கள் மூலம் மாலை நேரங்களில் தடுப்பூசி பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய் ஏற்படுவதை தடுக்க தர்மபுரி மாவட்டத்திற்கு 1 லட்சத்து 20 ஆயிரம் டோஸ்கள் தடுப்பூசி மருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே அனைத்து விவசாயிகள், கோழி வளர்போர் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பூசி செலுத்தி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்