பருவமழைக்கு முன்பு ஆடுகளுக்கு தடுப்பூசி போட வேண்டும்
பருவமழைக்கு முன்பு ஆடுகளுக்கு தடுப்பூசி போட வேண்டும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மழைக்கு வாய்ப்பு
நாமக்கல் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்கள் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அடுத்த 3 நாட்கள் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று 8 மி.மீட்டரும், நாளை (வியாழக்கிழமை) 12 மி.மீட்டரும், நாளைமறுநாள் (வெள்ளிக்கிழமை) 3 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக 96.8 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 75.2 டிகிரியாகவும் இருக்கும்.
காற்று மணிக்கு 4 கி.மீ.வேகத்தில் தெற்கு திசையில் இருந்து வீசும். காற்றின் ஈரப்பதம் குறைந்தபட்சமாக 55 சதவீதமாகவும், அதிகபட்சமாக 85 சதவீதமாகவும் இருக்கும்.
ஆட்டுக்கொல்லி நோய்
சிறப்பு வானிலையை பொறுத்த வரையில் ஆட்டுக்கொல்லி நோய் ஒரு முக்கிய நச்சுயிரி நோய் ஆகும். இந்த நச்சுயிரி ஆடுகளில் கடுமையான தொற்று நோயை ஏற்படுத்துகிறது. பாதிக்கப்பட்ட ஆடுகளில் இருந்து விழாக்கள் மற்றும் சந்தைகளில் மிக நெருக்கமாக மற்ற ஆடுகள் வைக்கப்படும்போது, அவற்றிற்கு பரவ அதிகம் வாய்ப்பு உள்ளது.
புதிதாக வாங்கி மந்தைகளில் சேர்க்கப்படும் ஆடுகள் மூலமாகவும், ஆட்டுக்கொல்லி நோய் பரவும். திடீரென்று ஏற்படும் கடுமையான காய்ச்சல், மிகவும் சோர்வடைதல், தீவனம் உட்கொள்ளாமை போன்ற அறிகுறிகள் தென்படும். இந்த நோய்க்கான தடுப்பூசியை பருவமழைக்கு முன்னர் போட வேண்டும். முதலில் 4 மாதம் மற்றும் அதற்கு மேலான ஆடுகளுக்கு அளிக்கப்பட வேண்டும். பிறகு ஆண்டுக்கு ஒருமுறை எல்லா ஆடுகளுக்கும் மறுதடுப்பூசி போடப்பட வேண்டும். இறுதி சினைப்பருவம் உள்ள ஆடுகள் மற்றும் பால் கொடுக்கும் ஆடுகளை தவிர்க்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.