காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்

காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்

Update: 2023-06-11 18:45 GMT

காலிபணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் ரெங்கராஜன் கூறினார்.

பாராட்டு விழா

திருத்துறைப்பூண்டியில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருத்துறைப்பூண்டி வட்டார கிளையின் சார்பில் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு வட்டாரத் தலைவர் வேதரத்தினம் தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் ரெங்கராஜன் கலந்துகொண்டு ஓய்வு பெற்றவர்களை பாராட்டி பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கப்படுகிறது. தகுதித்தேர்வின் அடிப்படையில் பதிவு உயர்வு வழங்கப்பட வேண்டும் என்ற தேசியக்கல்விக்கொள்கையின் அறிவுறுத்தலால் தமிழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலிபணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

மேல்முறையீடு செய்ய வேண்டும்

இதனால் கல்வித்துறையில் மிகப்பெரிய நிர்வாக குளறுபடி ஏற்படும் நிலை உள்ளது. ஆசிரியர்களுக்கு பதவி உயர்வுகளை தகுதி தேர்வின் அடிப்படையிலேயே வழங்க வேண்டும் என நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். பணிமூப்பின் அடிப்படையில் தான் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கூட்டணியின் சார்பில் உச்சநீதி மன்றம் வரை சென்று அதற்கான சட்டபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்

தமிழ்நாடு அரசின் மாநில கல்விக்கொள்கையினை செயல்படுத்தி கற்பித்தல் பணிகளை வழங்கி வருகிறது. இந்த மாநில கல்விக்கொள்கை அனைவருக்கும் பொதுவானதாக ஏற்றுக்கொள்ள கூடியதாக உள்ளது. தமிழக அரசு அறிவித்துள்ள காலை உணவு திட்டத்தினை வரவேற்கிறோம். அதே நேரத்தில் இப்பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்துவதை முற்றிலும் தவிர்த்து, பள்ளியின் பணிபுரியும் சத்துணவு பணியாளர்களிடமே ஒப்படைத்து திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.

ஊதியம் வழங்க வேண்டும்

இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு நீக்கி சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்ய அனுமதிக்க வேண்டும். உயர்கல்வி படித்தவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். மேலும் பள்ளிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு ஓராண்டாக ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது. உடனடியாக அவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாநிலத்தலைவர் லெட்சுமிநாராயணன், மாநிலப்பொருளாளர் இரு.குமார், திருத்துறைப்பூண்டி நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன், மாவட்டச்செயலாளர் ரெ.ஈவேரா, மாநிலத் துணைச் செயலாளர் சி.ஜூலியஸ், மாவட்டத் தலைவர் ரா.முருகேசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக வட்டார துணைத்தலைவர் மெய்யநாதன் ஆண்டறிக்கை வாசித்தார். வட்டாரச்செயலாளர் ஹரிகிருஷ்ணன் வரவேற்றார். முடிவில் வட்டாரப் செயலாளர் பொருளாளர் ஜெயந்தி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்