அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் காலிப் பணியிடங்கள்: தனியார் நிறுவனங்கள் மூலம் நிரப்புவது எவ்விதத்தில் நியாயம்? - ஓ. பன்னீர்செல்வம்

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நிரந்தரமான முறையில் நியமிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

Update: 2024-06-19 10:10 GMT

கோப்புப்படம் 

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்திருக்கிறது என்று சொல்லும் தி.மு.க., அதனை தீர்க்க நடவடிக்கை எடுக்கிறதா என்றால் இல்லை. கடந்த மூன்று ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில், தமிழ்நாட்டில் உள்ள அரசுத்துறைகள், அரசுப் பள்ளிக்கூடங்கள், அரசுக் கல்லூரிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் லட்சக்கணக்கான காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்பட்டாலே வேலையில்லாத் திண்டாட்டம் ஓரளவு குறைந்துவிடும். இதனைச் செய்யாமல், குறைந்தபட்ச தேவைக்கேற்ப பணியாட்களை ஒப்பந்த அடிப்படையிலும், வெளிமுகமை அடிப்படையிலும் நிரப்பி வருவதை தி.மு.க. அரசு வாடிக்கையாக கொண்டுள்ளது. இப்படிப்பட்ட தி.மு.க., வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு மத்திய அரசின் மீது பழி போடுவதைப் பார்க்கும்போது "ஊருக்குதான் உபதேசம் எனக்கல்ல" என்பதை நினைவுபடுத்துகிறது.

தமிழ்நாட்டில் இன்றைக்கு கிட்டத்தட்ட ஐந்து லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ளன. இவற்றில் பத்தில் ஒரு பங்கு பணியிடங்கள்கூட கடந்த மூன்று ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் நிரப்பப்படவில்லை. உள்ளாட்சி அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் எல்லாம் தனியார் நிறுவனங்கள் வாயிலாக குறைந்தபட்ச தேவைக்கேற்ப ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை தனியார் நிறுவனம் மூலம் நிரப்ப தி.மு.க. அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

திருநெல்வேலி, தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகம் சார்பில் 169 ஓட்டுனர்கள் மற்றும் 290 நடத்துநர்களை தேர்ந்தெடுத்து அனுப்புவதற்கான ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளது. இதேபோன்று, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களும் பணியாளர்களை தனியார் நிறுவனங்கள் மூலமாக தேர்ந்தெடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வருகின்றன. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பயிற்சியைப் பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அரசு வேலைக்காக காத்திருக்கின்ற நிலையில், தனியார் நிறுவனங்கள் மூலம் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்களை நிரப்புவது எவ்விதத்தில் நியாயம்? இது சமூகநீதிக்கு எதிரான செயல் இல்லையா? தனியார் நிறுவனங்கள் மூலம் ஆட்களை நியமிப்பதன் பின்னணி என்ன என்று புரியவில்லை.

தாலிக்குத் தங்கம் திட்டம், மடிக்கணினி வழங்கும் திட்டம், அம்மா உணவகங்கள், இரு சக்கர வாகன மானியத் திட்டம் என ஜெயலலிதா அவர்களால் துவக்கப்பட்ட பல திட்டங்களை முடக்கியதுபோல், அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கும் மூடுவிழா நடத்திட தி.மு.க. அரசு நினைக்கிறதோ என்ற சந்தேகம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது. தி.மு.க. அரசின் இந்தச் செயல், வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களின் எதிர்காலத்தை குழிதோண்டி புதைக்கும் நடவடிக்கை. தி.மு.க. அரசின் தொழிலாளர் விரோதச் செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதல்-அமைச்சர் இதில் உடனடியாக கவனம் செலுத்தி, அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் பொது விளம்பரம் மூலம் நிரந்தரமான முறையில் நியமிக்கவும், தனியார் நிறுவனம் வாயிலாக கோரப்பட்டிருக்கும் ஒப்பந்தப் புள்ளியினை உடனடியாக ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்