தனியார் ஆய்வகம் பெயரில் கொரோனா பரிசோதனையை பயன்படுத்தி குமரியில் ரூ.32 கோடி மோசடி

தனியார் ஆய்வக பெயரில் கொரோனா பரிசோதனையை பயன்படுத்தி குமரியில் ரூ.32 கோடி மோசடி செய்ததாக 2 டாக்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன.

Update: 2022-07-27 21:16 GMT

நாகர்கோவில்:

தனியார் ஆய்வக பெயரில் கொரோனா பரிசோதனையை பயன்படுத்தி குமரியில் ரூ.32 கோடி மோசடி செய்ததாக 2 டாக்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன.

கொரோனா பரிசோதனை

நாகர்கோவில் கே.பி. ரோட்டை சேர்ந்தவர் சீனிவாச கண்ணன் (வயது 65). டாக்டரான இவர் நாகர்கோவிலில் ஆய்வகம் நடத்தி வருகிறார். இவர் நாகர்கோவிலில் உள்ள ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு 1-வது கோா்ட்டில் ஒரு புகார் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நான் 1989-ம் ஆண்டு முதல் ஆய்வகம் நடத்தி வருகி றேன். இங்கு கொரோனா பரிசோதனை செய்ய மத்திய அரசால் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கடந்த 13-2-2022 அன்று ராபின் நேசையன் என்பவர் என்னை செல்போனில் தொடர்பு கொண்டு கொரோனா பரிசோதனை முடிவை அனுப்பும்படி கூறினார். ஆனால் அவரிடம் கொரோனா பரிசோதனைக்காக சளி மாதிரியை எனது ஆய்வகத்தில் எடுக்கவில்லை. மாறாக குழித்துறையில் உள்ள கிங்ஸ் ஆய்வகத்தில் பரிசோதனைக்காக சளி மாதிரி எடுக்கப்பட்டது தெரியவந்தது.

ரூ.32 கோடி மோசடி

பின்னர் இதுதொடர்பாக நான் விசாரணை நடத்தினேன். அப்போது குழித்துறையில் இயங்கி வரும் ஆய்வகத்தில் எனது ஆய்வக அங்கீகாரத்தை போலியாக பயன்படுத்தி கொரோனா பரிசோதனை செய்தது தெரியவந்தது. மேலும் எனது ஆய்வக ஊழியரின் கையெழுத்தையும் போலியாக போட்டுள்ளனர்.

இவ்வாறாக கடந்த 26-8-2020 முதல் 25-12-2022 வரை எனது ஆய்வக அங்கீகாரத்தை தவறாக பயன்படுத்தி ரூ.32 கோடியே 76 லட்சத்து 82 ஆயிரம் மோசடி செய்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட மோசடி ஆய்வக உரிமையாளரான குழித்துறையை சேர்ந்த டாக்டா்கள் ஜெயகுமார் (40), எட்வின் கிங்ஸ்ராஜ் (40) ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

டாக்டர்கள் மீது வழக்கு

இந்த மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி டாக்டர்கள் ஜெயகுமார் மற்றும் எட்வின் கிங்ஸ்ராஜ் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

---

Tags:    

மேலும் செய்திகள்