சுற்றுலாத்தலம் போல காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலை பயன்படுத்துவதா? திருவிழாவுக்கு குறிப்பிட்ட அளவிலான பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி

சுற்றுலாத்தலம் போல காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலை பயன்படுத்துவதற்கு அதிருப்தி தெரிவித்த மதுரை ஐகோர்ட்டு, ஆடி அமாவாசை திருவிழாவுக்கு குறிப்பிட்ட அளவிலான பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் எனவும் அரசுக்கு உத்தரவிட்டது;

Update: 2023-09-29 19:27 GMT

சுற்றுலாத்தலம் போல காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலை பயன்படுத்துவதற்கு அதிருப்தி தெரிவித்த மதுரை ஐகோர்ட்டு, ஆடி அமாவாசை திருவிழாவுக்கு குறிப்பிட்ட அளவிலான பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் எனவும் அரசுக்கு உத்தரவிட்டது.

களக்காடு புலிகள் காப்பகம்

நெல்லை மாவட்டம் பாபநாசம் காணி குடியிருப்பை சேர்ந்த சாவித்திரி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

காணி குடியிருப்பு பழங்குடியினர் வசிக்கும் பகுதியாகும். வனவிலங்குகள் பாதுகாப்பு அமைப்பில் உறுப்பினராக உள்ளேன். தாமிரபரணி ஆற்றை நம்பியே எங்கள் வாழ்வாதாரம் உள்ளது. இந்தநிலையில் களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதியில் சொரிமுத்து அய்யனார் கோவில், வன பேச்சியம்மன் கோவில் ஆகியவை அமைந்துள்ளன.

வனவிலங்குகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அந்த கோவில்களுக்கு பக்தர்கள் செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. ஆனாலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் விதிகளை மீறுகின்றனர். குறிப்பாக கடந்த ஆடி மாதம் சொரிமுத்து அய்யனார் கோவிலில் தரிசனம் செய்ய 3 நாட்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் தடை செய்யப்பட்ட பொருட்களை எடுத்து வந்தனர். காடுகளை மாசுபடுத்தினர்.

வெளிநபர்களுக்கு தடை

இதனால் புலிகள் காப்பகத்தில் ஏராளமான வன உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. வாகனங்களில் அதிக சக்தி வாய்ந்த ஒளி விளக்குகளை பயன்படுத்துவதால் வன விலங்குகள் அச்சத்திற்கு உள்ளாகின்றன.

இதே நிலை நீடித்தால் அந்த பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக இருக்காது. எனவே களக்காடு-முண்டந்துறை வனப்பகுதியில் வெளிநபர்கள் வருவதற்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

சுற்றுலா தலம்

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், களக்காடு புலிகள் காப்பகத்தில் மனிதர்கள் மற்றும் வாகன நடமாட்டத்தால் தற்போது புலிகளை காண்பதே அரிதாக உள்ளது. அதிக ஒளியுடைய வாகன விளக்குகளால் பல்லுயிர் தலத்தின் சூழல் மாறுபடும் நிலை ஏற்பட்டு, வனவிலங்குகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின்றன. இரவு நேரங்களில் கூட விலங்குகள் வெளியே வர அச்சப்படுகின்றன, என கவலை தெரிவித்தனர்.

மேலும் நீதிபதிகள் கூறுகையில், சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு தரிசனத்துக்காக வரும் பக்தர்கள், அந்த பகுதியை ஏதோ சுற்றுலா தலம் போல பயன்படுத்துகிறார்கள். இதையெல்லாம் தவிர்க்க, பழங்காலத்தை போல தீப்பந்தத்தை ஏந்தி கோவிலுக்கு சென்றால்தான் விலங்குகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு வராது என்றும் கருத்து தெரிவித்தனர்.

பக்தர்களுக்கு கட்டுப்பாடு

விசாரணை முடிவில், கடந்த ஆடி அமாவாசை திருவிழாவில் கோர்ட்டு அனுமதித்ததை விட கூடுதலாக பக்தர்கள் அந்த கோவிலில் கூடியுள்ளனர். எனவே இனிவரும் திருவிழாக்களின்போது, குறிப்பிட்ட அளவிலான பக்தர்களை மட்டும் அனுமதிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு, இந்த விசாரணையை 4 வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்