கரூர் பண்டரிநாதன் கோவிலில் உறியடி-வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி

கரூர் பண்டரிநாதன் கோவிலில் உறியடி மற்றும் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2022-08-20 18:40 GMT

உறியடி திருவிழா

கரூர் சன்னதி தெருவில் பிரசித்தி பெற்ற பண்டரிநாதன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று உறியடி திருவிழா மற்றும் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக பண்டரிநாதனுக்கு பால், பழம், விபூதி, சந்தனம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் பக்தர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பூஜை செய்யப்பட்ட உறியை கொண்டு சன்னதி முன்பு ஏற்றப்பட்டது. இதன் பின்னர் உறியடி திருவிழா நடைபெற்றது. சில பக்தர்கள் உறியடிக்க வருபவர்கள் மீது தண்ணீரை ஊற்றி அவர்களை உறி அடிக்க விடாமல் திணறடித்தனர். இதையும் மீறி சில பக்தர்கள் உறியடிக்க முயன்றனர். இந்த உறியடித்தல் நிகழ்ச்சியில் பலர் கலந்துகொண்டனா். உறியடித்தல் திருவிழா 20 நிமிடங்கள் நீடித்தன. இறுதியாக மணிகண்டன் என்பவர் உறியடித்தல் விழாவில் வெற்றி பெற்றார்.

வழக்கும் மரம் ஏறும் நிகழ்ச்சி

இதனையடுத்து வழுக்கு மரம் ஏறும் விழா நடைபெற்றது. இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக நன்கு வளர்ந்த பாக்கு மரத்தின் மேல் பட்டையை உரித்து, அதில் கடுகு, ஆரியம், உளுந்து மாவு, கிரீசு போன்ற பொருட்களைக் கலந்து மரத்தின் உச்சி வரை தடவி தயாராக வைக்கப்பட்டிருந்தது. இளைஞர்கள் பலர் பட்டை உறித்த இந்த மரத்தின் மீது ஒவ்வொருவராக ஏறத்தொடங்கினர். இதனிடையே சிலர் மரம் ஏறும் இளைஞர்கள் மீது தண்ணீரை ஊற்றினர். இதனால் சில இளைஞர்கள் மேலும் ஏற முடியாமல் வழுக்கி கீழே விழுந்தனர். இந்த விழா ஏறத்தாழ 15 நிமிடம் நீடித்தது.இறுதியாக லோகேஷ் என்பவர் மரத்தின் உச்சி வரை ஏறிச்சென்று பரிசை அள்ளிச்சென்றார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்