நீட் தேர்வுக்கு விலக்கு பெற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் -அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
மாணவர்கள் தற்கொலை தொடர்வதால் ‘நீட்' தேர்வுக்கு விலக்கு பெற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
'நீட்' தேர்வில் தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சம் காரணமாக நெய்வேலி மாணவி நிஷா தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நீட் தேர்வுக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில், மாணவர்களின் தற்கொலை அதிகரித்து வருவது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.
நியாயப்படுத்த முடியாது
நிஷாவின் தற்கொலை, நீட் தேர்வு தோல்வி அச்சம்காரணமாக நடப்பாண்டில் நிகழ்ந்துள்ள 2-வது தற்கொலை ஆகும். கடந்த மாதம் 27-ந் தேதி சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சந்துரு என்ற மாணவர், நீட் தோல்விஅச்சத்தால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடந்த 10 நாட்களில் இரு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருப்பதில் இருந்தே, நீட் தேர்வு இன்னும் உயிர்க்கொல்லியாக தொடருவதை உணர முடியும். உயிர்க்கொல்லியை கொல்வது தான் மாணவர்களை காப்பதற்கு சிறந்த வழியாகும்.
'நீட்' தேர்வுக்கு விலக்கு கோரிய மசோதாவுக்கு மத்திய அரசு இன்னும் ஒப்புதல் அளிக்காததை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. இது அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்காத செயலாகும்.
மனித உயிர் மேலானது
நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் பெற மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசும் எந்த வகையிலும் அழுத்தம் தரவில்லை. நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் பெறும் விவகாரத்தில் செய்யப்படும் தாமதம் காரணமாக, ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சூழல் உருவாக்கப்படுவதை சகித்துக் கொள்ள முடியாது.
இந்த விவகாரத்தில் தமிழக அரசு விரைவாக செயல்பட்டு நீட் விலக்கு சட்டத்திற்கு நடப்பாண்டிற்கான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு முன்பாக ஒப்புதல் பெற வேண்டும். மத்திய அரசும் இனியும் தாமதிக்காமல் நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.
அதேநேரத்தில் மருத்துவப் படிப்பை விட மனித உயிர் மேலானது என்பதால், நீட் தேர்வுக்கு அச்சப்பட்டு தற்கொலை செய்து கொள்வதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.