ஆன்லைன் மருந்து விற்பனையை தடைசெய்ய விற்பனை பிரதிநிதிகள் வலியுறுத்தல்

நோயாளிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் ஆன்லைன் மருந்து விற்பனையை தடைசெய்ய வேண்டும் என்று மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2023-07-22 10:36 GMT

நோயாளிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் ஆன்லைன் மருந்து விற்பனையை தடைசெய்ய வேண்டும் என்று மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.

பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கம் சார்பில் மாநில பொதுக்குழு கூட்டம் வேலூரில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில தலைவர் சத்தியநாராயணன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் விவேகானந்தன் முன்னிலை வகித்தார். இதில் அகில இந்திய தலைவர் ரமேஷ்சுந்தர், பொதுச் செயலாளர் சாந்தனுசட்டர்ஜி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். பொருளாளர் நாகராஜன் வரவேற்றார்.

கூட்டத்தில், மருந்து விற்பனை பிரதிநிதிகளுக்கு 8 மணி நேர வேலையை உறுதிப்படுத்த வேண்டும். ரூ.26 ஆயிரம் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றினர்.

ஆன்லைனில் மருந்து விற்பனை

இதையடுத்து மாநில தலைவர் சத்தியநாராயணன், அகில இந்திய தலைவர் ரமேஷ்சுந்தர் மற்றும் நிர்வாகிகள் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:-

மருந்து பொருட்களுக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி. வரியினால் ஏழை எளிய மக்கள், நடுத்தர மக்கள் மிகவும் பாதிப்படைகின்றனர். எனவே 12 சதவீத ஜி.எஸ்.டி. வரியை நீக்க வேண்டும். ஒரு மருந்துக்கு பல்வேறு வகையான விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த வேறுபாடு இல்லாமல் விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.

ஆன்லைன் மூலம் மருந்து விற்பனையை தடை செய்ய வேண்டும். ஏனென்றால் ஆன்லைனில் விற்கப்படும் மருந்து, நோயாளியின் நோய்க்கு தீர்வளிக்கும் மருந்தாக இல்லாமல் மாறிப்போனால் உடல் உபாதைகளை சந்திக்க வேண்டிய அபாயம் ஏற்படும். மேலும் நோயாளியின் ரகசிய தன்மைக்கு உத்தரவாதம் இல்லாத நிலையும் இருக்கிறது.

விலைக்கொள்கை

மத்திய அரசின் மக்கள் மருந்தகத்தில் விலை குறைவாகவும் பிற இடங்களில் விலை அதிகமாகவும் உள்ளதாக புகார் எழுகிறது. ஆனால் மக்கள் மருந்தகத்தில் விற்கப்படும் மருந்து தரமானதா? என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. சமீபத்தில் இந்திய மருந்தக தர கட்டுப்பாட்டு நிறுவனம் நடத்திய ஆய்வில் 17 நிறுவனங்களின் மருந்துகள் தரம் குறைவானது என்று கண்டறிந்து, நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். மருந்து பொருட்களின் விலை நிர்ணயத்தில் மத்திய அரசு இரு நிலைபாட்டை கொண்டுள்ளது. எனவே மருந்து பொருட்களின் விலையை கட்டுப்படுத்த மருந்து பொருள் விலைக் கொள்கையில் மத்திய அரசு மாற்றம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்