யு.பி.எஸ்.சி. தேர்வை 434 பேர் எழுதினர்

வேலூர் மாவட்டத்தில் 3 மையங்களில் நடந்த யு.பி.எஸ்.சி. தேர்வை 434 பேர் எழுதினார்கள். 196 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.

Update: 2023-04-16 17:28 GMT

யு.பி.எஸ்.சி. தேர்வு

தேசிய பாதுகாப்பு அகாடமி, ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவை, கடற்படை அகாடமியில் சேருவதற்கான எழுத்துத்தேர்வு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) சார்பில் நாடு முழுவதும் நேற்று நடந்தது. தமிழகத்தில் சென்னை, வேலூர், கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. வேலூர் மாவட்டத்தில் இந்த தேர்வை எழுத வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 530 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

அவர்கள் தேர்வு எழுத வேலூர் ஊரீசு மேல்நிலைப்பள்ளி, வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி, தோட்டப்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி என்று 3 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. தேர்வு காலை 9 மணிக்கு தொடங்கி 11 மணிவரையும், 12 மணி முதல் பிற்பகல் 2 மணி மற்றும் மாலை 3 மணி முதல் 5 மணி வரை என்று பல்வேறு கட்டங்களாக நடந்தது. இதையொட்டி காலை 8 மணி முதல் தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு வரத்தொடங்கினர்.

434 பேர் எழுதினர்

அவர்கள் பலத்த சோதனைக்கு பின்னர் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். செல்போன், கால்குலேட்டர், கைக்கெடிகாரம் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் தேர்வு அறைக்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஒவ்வொரு அறையிலும் 12 பேர் தேர்வு எழுதும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன. யு.பி.எஸ்.சி. தேர்வை 434 பேர் எழுதினார்கள். 196 பேர் எழுதவில்லை.

வேலூர் ஊரீசு, வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி தேர்வு மையங்களை வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது வருவாய்த்துறை அதிகாரிகள் உடனிருந்தனர். தேர்வறை மற்றும் தேர்வு மையங்களை கண்காணிக்கும் பணியில் 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட்டிருந்தனர். தேர்வு மையங்களுக்கு முக்கிய பகுதிகளில் இருந்து சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் தேர்வு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்