பலத்த மழைக்கு சாலையில் வேரோடு சாய்ந்த மரம்

விக்கிரமசிங்கபுரத்தில் பலத்த மழைக்கு சாலையில் மரம் வேரோடு சாய்ந்தது. இதில் இந்து முன்னணி நிர்வாகி படுகாயம் அடைந்தார்.

Update: 2022-12-02 21:06 GMT

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலையில் சுமார் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது. அப்போது விக்கிரமசிங்கபுரம் அம்பலவாணபுரத்தில் சாலையோரம் நின்ற பழமைவாய்ந்த காட்டு பூவரசு மரம் திடீரென்று வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது. அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற விக்கிரமசிங்கபுரம் கட்டபுளி தெருவைச் சேர்ந்த இந்து முன்னணி நகர தலைவர் முருகன் (வயது 50) மீது மரக்கிளைகள் விழுந்ததில் அவர் படுகாயம் அடைந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று அவரை மீட்டு சிகிச்சைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சாலையில் சரிந்த மரத்தை பொக்லைன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்தி, வெட்டி அகற்றினர். இதனால் அந்த வழியாக சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பலத்த மழைக்கு மரம் சாய்ந்து விழுந்ததும், அதில் இந்து முன்னணி நிர்வாகி சிக்கியதும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அம்பலவாணபுரத்தில் சாலை விரிவாக்கம் மற்றும் வாறுகால் அமைக்கும் பணிகள் நடைபெறுவதால் சாலையின் இருபுறமும் பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது. இதனால் மரம் வலுவிழந்து சாய்ந்துள்ளது. எனவே சாலை விரிவாக்கம், வாறுகால் அமைக்கும் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்