வேரோடு சாய்ந்து மலைப்பாதையில் விழுந்த மரம்

பெரும்பாறை அருகே மரம் வேரோடு சாய்ந்து மலைப்பாதையில் விழுந்ததால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது.

Update: 2023-09-04 21:00 GMT

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் இருந்து மலைக்கிராமங்களான பெரும்பாறை, தடியன்குடிசை, மங்களம்கொம்பு, காமனூர் வழியாக தாண்டிக்குடிக்கு தினமும் காலை 10.45 மணிக்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது. அதன்படி நேற்று காலையில் வத்தலக்குண்டுவில் இருந்து தாண்டிக்குடிக்கு அரசு பஸ் அந்த பஸ் புறப்பட்டது. அதில், சுமார் 20 பயணிகள் இருந்தனர். பஸ்சை வத்தலக்குண்டுவை சேர்ந்த சுரேஷ் ஓட்டினார். நேற்று மதியம் 1 மணிக்கு காமனூர் வழியாக மலைப்பாதையில் அந்த பஸ் தாண்டிக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தது.

அப்போது கொடலங்காடு அருகே சாலை ஓரத்தில் நின்ற பெரிய மரம் ஒன்று திடீரென வேரோடு சாய்ந்து மலைப்பாதையின் குறுக்கே விழுந்தது. இதை கவனித்த டிரைவர் சுரேஷ் சாமர்த்தியமாக பிரேக் போட்டு பஸ்சை நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மரம் சாய்ந்து விழுந்ததை கண்டு பஸ்சை முன்கூட்டியே நிறுத்திய டிரைவரை பயணிகளும், பொதுமக்களும் பாராட்டினர்.

இதுகுறித்து தகவலறிந்த காமனூர் ஊராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் அவர்கள், அறுவை எந்திரம் மூலம் மரத்தை வெட்டி அகற்றினர். இதனால் தாண்டிக்குடி மலைப்பாதையில், சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்