புளியமரம் வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு

பெரம்பலூரில் பலத்த காற்றுடன் பரவலான மழை பெய்தது. பலத்த காற்று காரணமாக திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் புளியமரம் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Update: 2023-05-26 18:30 GMT

மழை

தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடுமையான வெயில் கொளுத்தி வந்த நிலையில், 32 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

அதன்படி, பெரம்பலூரில் நேற்று காலை முதல் மதியம் 3 மணி வரை அனல் காற்றுடன் கடுமையான வெப்பநிலை இருந்தது. அதைத்தொடர்ந்து இதமான தட்பவெப்ப நிலை நிலவியது. சிறிது நேரத்தில் பலத்த காற்று வீசியது. தொடர்ந்து இடி, மின்னலுடன் சாரல் மழை பெய்தது. பெரம்பலூர், எசனை, வேப்பந்தட்டை, சிறுவாச்சூர், பாடாலூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் பரவலான மழை பெய்தது. பல இடங்களில் முருங்கை மரங்கள் வேரோடு சாய்ந்தன. பெரம்பலூரிலும், சுற்றுப்புற கிராமங்களிலும் மின்சாரம் அடிக்கடி தடைபட்டதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

பலத்த காற்று வீசியதால் பெரம்பலூர் புறநகர் துறைமங்கலத்தில் உள்ள சாய்பாபா கோவில் அருகில் சாலையோரத்தில் இருந்த புளியமரம் வேரோடு சாய்ந்தது. இதனால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து தடைபட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலையில் அணிவகுத்து நின்ற வாகனங்களை சரிசெய்தனர். மேலும் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தில் இருந்து தொழிலாளர்கள் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் சாலையில் சாய்ந்து கிடந்த புளிய மரத்தின் கிளைகளை மோட்டார் எந்திரங்கள் உதவியுடன் அறுத்து அகற்றி, கிளைகளை அப்புறப்படுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்