ரூ.2½ கோடியில் நடைபயிற்சி பூங்காவை மேம்படுத்தும் பணிகள்
விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் ரூ.2½ கோடி மதிப்பில் நடைபயிற்சி பூங்காவை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை கலெக்டர் பழனி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் நடைபயிற்சி பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் ரூ.2½ கோடி மதிப்பில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் உடற்பயிற்சி கூடங்களுடன் கூடிய விளையாட்டு மைதானம் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்பணிகளை நேற்று முன்தினம் காலை மாவட்ட கலெக்டர் பழனி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணிகளை தரமான முறையில் முடித்து விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும்படி அறிவுறுத்தினார். அதன் பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
விரைந்து மேற்கொள்ள...
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் பொதுமக்கள் மற்றும் வயதானவர்கள் காலை, மாலை நேரங்களில் நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் நடைபாதையுடன் கூடிய பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இப்பூங்காவில் நாள்தோறும் பொதுமக்கள், அரசு அலுவலர்கள், பணியாளர்கள் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இப்பூங்காவை மேம்படுத்தும் வகையில் ரூ.2½ கோடி மதிப்பில் சிறுவர்கள் விளையாடுவதற்கான விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய சிறுவர் பூங்கா, நீரூற்று, இறகு பந்து, சருக்கு விளையாட்டு போன்ற விளையாட்டிற்கான மைதானங்களும், தியான அறை, இளைஞர்கள், வயதானவர்கள் உடல்திறனை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் நவீன உடற்பயிற்சிக்கூடம், சிறிய அளவிலான சிற்றுண்டி, நவீன கழிப்பறை வசதி போன்ற அம்சங்களுடன் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
நாள்தோறும் அதிகளவிலான நபர்கள் இந்த நடைபயிற்சி பூங்காவை பயன்படுத்தி வருவதால் பூங்கா மேம்படுத்தும் பணியை விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது நகராட்சி ஆணையர் ரமேஷ், நகராட்சி உதவி பொறியாளர் ராபர்ட் உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.