அன்வர்திகான்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த நடவடிக்கை

அன்வர்திகான்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று ஊராட்சி மன்ற தலைவர் எம்.எஸ்.அசாருதீன் தெரிவித்துள்ளார்.

Update: 2023-03-09 18:10 GMT

அன்வர்திகான்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று ஊராட்சி மன்ற தலைவர் எம்.எஸ்.அசாருதீன் தெரிவித்துள்ளார்.

அன்வர்திகான்பேட்டை ஊராட்சி

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ஊராட்சி ஒன்றியத்தில் அன்வர்திகான்பேட்டை ஊராட்சி மன்றம் உள்ளது. இதில் அன்வர்திகான்பேட்டை, ஆவதம் புதுப்பட்டு, மேல்ஆவதம், ராமாபுரம், காமராஜர் காலனி, கக்கன் காலனி, ராஜூவ்காந்தி நகர், ஆவதம், கீழ்ஆவதம், ஆவதம்பேண்டை ஆகிய குக்கிராமங்கள் உள்ளன. ஊராட்சி மன்ற தலைவராக ஆவதம் புதுப்பட்டு பகுதியை சேர்ந்த எம்.எஸ்.அசாருதீன் உள்ளார்.

ஊராட்சியில் செய்யப்பட்டுள்ள வளர்ச்சி பணிகள் குறித்து அவர் கூறியதாவது:-

கீழ்ஆவதம் பகுதியில் ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்திலும், மேல் ஆவதத்தில் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்திலும் மின்மோட்டார், பைப்லைன், ஆவதம் புதுப்பட்டில் ரூ.4 லட்சத்து 49 ஆயிரத்தில் ஆழ்துளை கிணறு, பைப்லைன், அதே பகுதியில், ரூ.8 லட்சத்து 12 ஆயிரத்தில் கழிவுநீர் கால்வாய், கீழ்ஆவதம் சின்னத்தெருவில் ரூ.46 ஆயிரத்தில் பைப்லைன், எம்.எல்.ஏ நிதியில் இருந்து மசூதி தெருவில் ரூ.3 லட்சத்திலும், கக்கன் காலனியில் ரூ.5 லட்சத்திலும் சிமெண்டு சாலை உள்ளிட்ட பணிகள் முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.

விரைவில் பணிகள் தொடக்கம்

ஆவதம் புதுப்பட்டு பகுதியில் ரூ.7 லட்சத்தில் ஆழ்துளை கிணறு, பைப்லைன், ரூ.23 லட்சத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், கக்கன் காலனியில் ரூ.4 லட்சத்தில் பேவர் பிளாக் ரோடு உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது. மேல் ஆவதம் காலனியில் ரூ.8 லட்சத்து 17 ஆயிரத்திலும், அதே பகுதியில் ரூ.7 லட்சத்திலும், ராமாபுரத்தில் ரூ.4 லட்சத்து 12 ஆயிரத்திலும் கழிவுநீர் கால்வாய், ஆவதம் புதுப்பட்டில் ரூ.1½ லட்சத்திலும், அன்வர்திகான்பேட்டையில் ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்திலும் பைப்லைன், ஆவதம் புதுப்பட்டில் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்தில் மின்மோட்டார், ஆவதம் புதுப்பட்டில் ரூ.4 லட்சத்து 76 ஆயிரத்திலும், ரூ.6 லட்சத்து 13 ஆயிரத்திலும், இருளர் காலனியில் ரூ.4 லட்சத்து 50 ஆயிரத்திலும் சிமெண்டு சாலைகள், ராமாபுரம் ரோட்டு தெருவில் ரூ.1 லட்சத்து 91 ஆயிரத்திலும், கக்கன் காலனியில் ரூ.1 லட்சத்து 98 ஆயிரத்தில் மின்மோட்டார், பைப்லைன் உள்ளிட்ட பணிகளுக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது. விரைவில் அந்த பணிகள் தொடங்கப்பட உள்ளது.

பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் மூலம் 69 பயனாளிகளுக்கு இலவச வீடுகள் வழங்கப்பட்டுள்ளது. 4 மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் கட்டப்பட்டுள்ளது.

மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்துதல்

ஊராட்சியில் உள்ள அனைத்து தெருக்களையும் சிமெண்டு சாலைகளாகவும், பழுதடைந்த சாலைகளில் புதிய தார் சாலை அமைக்கவும், ராமாபுரம், மேல்ஆவதம் பகுதிகளில் உள்ள சுடுகாட்டிற்கு எரிமேடை, சித்த மருத்துவமனை, கால்நடை மருத்துவமனை, ராமாபுரம் காலனி, கீழ்ஆவதம் ஆகிய பகுதிகளில் அங்கன்வாடி மையம், அன்வர்திகான்பேட்டையில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, மேல் ஆவதத்தில் சமுதாய கூடம், உடற்பயிற்சி கூடம், விளையாட்டு மைதானம், அன்வர்திகான்பேட்டையில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்துதல், மேல்ஆவதம், ராமாபுரம் பகுதியில் 2 உயர்கோபுர மின் விளக்கு அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

ஊராட்சியில் 2 முறை பொது மருத்துவ முகாம், 4 முறை கால்நடை மருத்துவ முகாம் நடத்தப்பட்டு உள்ளது.

ஊராட்சியில் பனை விதைகள், மரக்கன்றுகள் நடப்பட்டு உள்ளது. நான் தினமும் காலையில் ஒவ்வொரு வார்டாக சென்று, வார்டு பகுதிகளில் அடிப்படை குறைகள் இருக்கிறதா? என்று பார்த்து ஆய்வு செய்து வருவேன். மேலும் வார்டு பகுதிகளில் மக்கள் கூறும் குறைகளை உடனுக்குடன் சரிசெய்து கொடுத்து வருகிறேன். வார்டு பகுதிகளில் குப்பைகள் சரியாக அள்ளப்படுகிறதா?, குடிநீர் தடையில்லாமல் வழங்கப்படுகிறதா? என்று பார்வையிட்டு ஆய்வு செய்து, சரிசெய்து கொடுத்து வருகிறேன்.

முதன்மை ஊராட்சியாக...

ஊராட்சியில் தடையில்லாமல் குடிநீர் கிடைக்கவும், குடிநீர் குழாய்கள் இல்லாத பகுதிகளில் புதிய குழாய்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறேன். மின் விளக்குகள் இல்லாத பகுதிகளில் புதிய மின் விளக்குகள் பொருத்தவும், பழுதடைந்த மின் விளக்குகளை உடனுக்குடன் மாற்றவும் நடவடிக்கை எடுத்து வருகிறேன். ஊராட்சிக்கு அடிப்படையாக என்னென்ன தேவை என்பதை உடனுக்குடன் அறிந்து அதை அந்தந்த துறையில் கோரிக்கை வைத்து திட்டத்தை பெற்று வந்து அதை ஊராட்சியில் செயல்படுத்தி கொடுத்து வருகிறேன்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அன்வர்திகான்பேட்டை ஊராட்சியை அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் முதன்மையான ஊராட்சியாக மாற்ற ஒன்றிய கவுன்சிலர் எம்.குமார், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பி.அம்பிகா பாஸ்கரன், வார்டு உறுப்பினர்கள் கே.குமார், எஸ்.தனலட்சுமி சர்வேந்திரன், எச்.பிரதாப், எஸ்.சுமங்கலி செல்வராஜ், ஆர்.அலிமாபீரசுஸ், எம்.ஷபினா மஹபூப்பாஷா, ஜெ.சத்தியவான், எம்.இந்திரா மோகன்ராஜ் ஆகியோருடன் இணைந்து செயல்பட்டு மாற்றுவேன்.

இவ்வாறு ஊராட்சி மன்ற தலைவர் எம்.எஸ்.அசாருதீன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்