உபதேசியார்-பணியாளர்கள் நல வாரிய உறுப்பினராக விண்ணப்பிக்கலாம்

கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்-பணியாளர்கள் நல வாரிய உறுப்பினராக விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

Update: 2023-03-09 18:45 GMT

கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்-பணியாளர்கள் நல வாரிய உறுப்பினராக விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நல வாரியம்

தமிழ்நாட்டிலுள்ள கிறித்துவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள், வேதியர்கள், சீஷப்பிள்ளைகள், பாடகர்கள், கல்லறை தோட்ட பணியாளர்கள், கிறிஸ்தவ ஆதரவற்றோர் இல்லங்கள், தொழுநோயாளியர் மறுவாழ்வு இல்ல பணியாளர்கள் போன்றவர்களின் சமூக பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைக்க அரசு ஆணையிட்டுள்ளது.

இந்த நல வாரியத்தில் உறுப்பினராக சேருவதற்கான விண்ணப்பங்கள் அனைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பங்கள்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட எல்லைக்குட்பட்ட ரோமன் கத்தோலிக் திருச்சபை அதன் பேராயர்கள் மற்றும் ஆயர்கள், புராட்டஸ்டாண்ட் திருச்சபைகள் ஆயர்கள், சினாட் ஆப் பெண்ட கோஸ்டல் சார்ச்சஸ் போன்ற அங்கீகாரம் செய்யப்பட்ட திருச்சபைகளிடம் இருந்து சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

மேற்காணும், திருச்சபைகளின் பரிந்துரையின் அடிப்படையில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மற்றும் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலரால் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்.

நலத்திட்டங்கள்

இந்த வாரியத்தில் பதிவு செய்யும் உறுப்பினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் ஏனைய அமைப்பு சாரா வாரியங்கள் மூலம் வழங்கப்பட்டு வரும் நலத்திட்டங்கள் போன்றவை வழங்கப்படும்.

உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு 10-ம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ., பாலிடெக்னிக், தொழிற்கல்வி, பட்டப்படிப்பு வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.விபத்தில் மரணம் ஏற்பட்டதால் ரூ.1 லட்சமும், விபத்தில் ஊனம் அடைந்தால் தன்மைக்கேற்ப ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும்.

உதவித்தொகை

இயற்கை மரணம் ஏற்பட்டால் ரூ.20 ஆயிரமும், ஈமசடங்கு உதவிதொகையாக ரூ.5 ஆயிரமும், மகப்பேறு உதவித்தொகை ரூ.6 ஆயிரமும், கண் கண்ணாடிக்கு ரூ.500, முதியோர் ஓய்வூதியமாக ரூ.1000-மும் வழங்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்