விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் வரை பொருளீட்டு கடன்

ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் வரை பொருளீட்டு கடன் பெறலாம் என அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.

Update: 2023-01-22 18:43 GMT

ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் வரை பொருளீட்டு கடன் பெறலாம் என அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.

ரூ.3 லட்சம் வரை கடன்

வேளாண்மை விற்பனை வணிக துறையின் கீழ் செயல்படும் ராமநாதபுரம் விற்பனைக்குழு கட்டுப்பாட்டில் உள்ள ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர், திருவாடானை மற்றும் ராஜசிங்கமங்கலம் ஆகிய ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் இந்த மாதம் 31-ந்தேதி வரை வாரம்தோறும் பொருளீட்டுகடன் மேளா நடைபெறவுள்ளது.

ராமநாதபுரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் திங்கள்கிழமை, பரமக்குடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வியாழக்கிழமை, கமுதி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வெள்ளிக்கிழமை, முதுகுளத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் புதன்கிழமை, திருவாடானை, ராஜசிங்கமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் சனிக்கிழமை கடன் மேளா நடைபெறவுள்ளது. ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இருப்பு வைத்துள்ள விளைபொருள் மதிப்பில் 50 முதல் 75 சதவீதம் வரை கடன் வழங்கப்படும். முதல் 15 தினங்களுக்கு வட்டி தள்ளுபடி செய்யப்படும். அதிகபட்சம் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்கப்படும்.

காப்பீடு வசதி

ரூ.1 லட்சத்திற்கு 6 மாத வட்டி ரூ.2,260 வசூலிக்கப்படும். விளைபொருளை 180 நாள் இருப்பு வைக்க வசதி செய்யப்பட்டுள்ளது. விளைபொருளை இருப்பு வைக்கும் விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் வரை காப்பீடு வசதி, விளைபொருள் இருப்பு வைத்து விற்பனை செய்யும் பொழுது ரூ.1 லட்சத்திற்கு ரூ.30 ஆயிரம் வரை கூடுதலாக பெறும் வாய்ப்பு உள்ளது. ஆதார் அட்டை, சிட்டா அடங்கல், வங்கி கணக்கு விவரம், போட்டோ ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு ஒழுங்குமுறை விற்பனைக்கூட பொறுப்பாளர்களை தொடர்பு கொள்ளலாம். ராமநாதபுரம்-9677844623, பரமக்குடி-8248865221, முதுகுளத்தூர்-9486901505, கமுதி-9025806296, திருவாடானை-9443005424, ராஜசிங்கமங்கலம்-8056446037. இந்த தகவலை வேளாண் துணை இயக்குனர் மூர்த்தி, விற்பனைக்குழு செயலாளர் ராஜா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்