கொளுத்தும் கோடை வெயிலால் குறையாத வெப்பம்

அக்னி நட்சத்திரம் முடிந்து ஒருவாரம் ஆகியும் கொளுத்தும் கோடை வெயிலால் குறையாத வெப்பம் நிலவுவதால் மக்கள் தவித்து வருகின்றனர்.

Update: 2023-06-06 19:30 GMT

குறையாத கோடைவெயில்

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே கோடைவெயில் கடுமையாக கொளுத்தி வருகிறது. கோடைகாலம் தொடங்கும் முன்பே வெப்பம் அதிகமாக இருந்தது. இதற்கிடையே கடந்த மாதம் 4-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை அக்னி நட்சத்திரம் வாட்டி வதைத்தது. ஒருசில நாட்கள் இந்த காலக்கட்டத்தில் கோடைவெயில் அளவு மேலும் கடுமையாக உயர்ந்தது.

இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை அக்னி நட்சத்திர காலத்தில் வெப்பம் உச்சத்தில் இருந்தது. திண்டுக்கல்லில் அதிகபட்சமாக 107.6 டிகிரி வரை சூரியன் வெப்பத்தை கொட்டியது. அக்னி நட்சத்திரத்தின் கடைசி 2 நாட்கள் 107.6 டிகிரி வெயில் கொளுத்தியது. அதன்பின்னர் வெயிலின் தாக்கம் ஓரளவே தான் குறைந்தது.

மக்கள் தவிப்பு

மேலும் கோடைகாலம் முடிந்து ஜூன் மாதம் தொடங்கி ஒரு வாரமாகியும் வெயிலின் கொடுமை பெரிய அளவில் குறையவில்லை. திண்டுக்கல்லில் நேற்றும், நேற்று முன்தினமும் வெயிலின் அளவு 98.6 டிகிரியை தொட்டது. மதிய நேரத்தில் வெளியே நடமாட முடியாத அளவுக்கு வெப்பம் காணப்பட்டது.

இதனால் மக்கள் வெப்பத்தை சமாளிக்க முடியாமல் தவிக்கின்றனர். இதன் காரணமாக மதிய வேளையில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருக்கிறது. கோடைவெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க குடையை பிடித்து கொண்டும், தலையை துணியால் மூடிக்கொண்டும் மக்கள் நடமாடினர். மேலும் மக்கள் உடல் வெப்பத்தை தணிக்க இளநீர், கூழ், பழச்சாறு குடிப்பதால் அந்த கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.

இளைஞர்கள், சிறுவர்கள் குளங்கள், கிணறுகளில் உற்சாக குளியல் போட்டு வெப்பத்தில் இருந்து காத்து கொள்கின்றனர். அதேபோல் பகலில் சுட்டெரிக்கும் சூரியனின் வெப்பம் நள்ளிரவு வரை நீடிப்பதால் வீடுகளில் மின்விசிறி, குளிர்சாதன எந்திரங்கள் இயங்கி கொண்டே இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்