பாதுகாக்கப்படாத தொல்லியல் அடையாளங்கள்

தேனி மாவட்டத்தில் உள்ள தொல்லியல் அடையாளங்களை பாதுகாக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-02-07 17:04 GMT

தேனி மாவட்டத்தில் ஏராளமான தொல்லியல் அடையாளங்கள் உள்ளன. உத்தமபாளையத்தில் சமணர் படுகை உள்ளது. அங்கு சமணர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் உள்ளன. சமணர்கள் தீட்டிய பாறை ஓவியங்கள் உள்ளன. அங்குள்ள சுனையும் பராமரிப்பு இன்றி சுகாதாரக்கேடாக உள்ளது. தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இந்த இடம் உள்ளபோதிலும், அங்கு எந்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. இதனால், மாலை நேரங்களில் பலரும் இங்கு மதுஅருந்த வருகின்றனர். அங்கு தொல்லியல் அடையாளங்கள் சிதைக்கப்பட்டு வருகின்றன. இதேபோல், வைகை நதி வழிந்தோடும் தேனி மாவட்டத்தில் பாதுகாப்பின்றி ஏராளமான தொல்லியல் அடையாளங்கள் உள்ளன. கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, சில்வார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தமிழர்களின் தொல்லியலை பறைசாற்றும் அடையாளங்கள் பல கண்டறியப்பட்ட போதிலும் அவை பாதுகாக்கப்படாமல் உள்ளன.

இதுகுறித்து வைகை தொல்லியல் பண்பாட்டுக் கழக நிறுவனர் பாவெல்பாரதி கூறும்போது, "வீரபாண்டி, சின்னமனூர், பெரியகுளம் பகுதிகளில் பழமையான கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் ஏராளமான கல்வெட்டுகள் உள்ளன. கோவில் திருப்பணிகளின்போது கல்வெட்டுகள் அழியாத வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் பல இடங்களில் தொல்லியல் அடையாளங்கள் உள்ளன. மயிலாடும்பாறையில் குதிரைகட்டிப் புடவு, அருகவெளி சித்திரைக்கல் புடவு, ஆண்டிப்பட்டி அருகே மூனாண்டிபட்டியில் பாறை ஓவியம், காமயகவுண்டன்பட்டியில் படப்புப்பாறை, சில்வார்பட்டியில் குழிக்குறி கல்திட்டை, கடமலைக்குண்டு அருகே வெம்பூரில் குத்துக்கல் பாதை போன்றவை உள்ளன. வெம்பூரில் உள்ள குத்துக்கல் பாதை என்பது சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. வானிலையை கணிப்பதற்காக அவை நடப்பட்டதாக அறியப்படுகிறது. இதுபோன்ற குத்துக்கல் பாதை தமிழகத்தில் இங்கு மட்டும் தான் உள்ளது. மூனாண்டிபட்டி பாறை ஓவியத்தில் தமிழர்களின் போர் ஆயுதங்களில் ஒன்றான வளரி வரையப்பட்டுள்ளது. இதுபோன்ற தொல்லியல் அடையாளங்களை பாதுகாக்க வேண்டும். இதுபோன்ற இடங்களை மையப்படுத்தி மாவட்டத்தில் தொல்லியல் வரலாற்று சுற்றுலாவை அறிமுகம் செய்து இவற்றின் வரலாற்றை அடுத்த தலைமுறையிடம் கொண்டு சேர்க்கலாம்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்