திட்டமிடாமல் கட்டப்பட்ட தடுப்பணைகள்

திட்டமிடாமல் கட்டப்பட்ட தடுப்பணைகளால் ஏரிக்கு நீர் வராததால் விவசாயிகள் வேதனையடைந்தனா்.

Update: 2023-06-08 18:45 GMT

விழுப்புரம் அருகே உள்ளது முத்தாம்பாளையம் கிராமம். இக்கிராமத்தில் உள்ள ஏரி 144 ஏக்கர் பரப்பளவை கொண்டது. பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரிக்கு, மழைக்காலத்தின்போது திருவாமாத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பம்பை ஆற்றில் இருந்து வரத்து வாய்க்கால்கள் மூலம் தண்ணீர் வரும். இதன் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அதுமட்டுமின்றி அப்பகுதி மக்களுக்கு நீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது.

மழைக்காலத்தில் பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஏரி நீர்வரத்து வாய்க்காலில் தண்ணீர் அதிகமாக வரும்போது குறிப்பிட்ட அளவுக்கு ஏரிக்கு தண்ணீர் வரும். மீதமுள்ள தண்ணீர், சுந்தரமடை ஓடை வழியாக மீண்டும் பம்பை ஆற்றுக்கே செல்லும். இதனை தவிர்க்கும் வகையிலும் முத்தாம்பாளையம் ஏரிக்கு முழுவதுமாக நீர்வரத்து வரும் வகையிலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் பம்பை ஆற்றில் இருந்து முத்தாம்பாளையம் ஏரிக்கு வரும் நீர்வரத்து வாய்க்காலின் சுந்தரமடை ஓடைக்கும், அயினம்பாளையத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் தலா ரூ.5 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு 2 தடுப்பணைகள் கட்டப்பட்டன.

நீர்வரத்து தடை

இந்த தடுப்பணைகள் கட்டி முடித்த சில நாட்களிலேயே கோடை மழை பெய்தபோது இந்த தடுப்பணைகளுக்கு தண்ணீர் வந்தது. ஆனால் வரத்து வாய்க்காலை விட அதிக உயரத்திற்கு தடுப்பணைகளை கட்டியதால் முத்தாம்பாளையம் ஏரிக்கு நீர்வரத்து செல்வது தடைபட்டுள்ளது. இதுபற்றி அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், சம்பந்தப்பட்ட ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதுபற்றி பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டால், இந்த தடுப்பணைகளை கட்டுவதற்கு எங்களிடம் முறையான அனுமதி பெறவில்லை.

முறையாக அனுமதி பெற்றிருந்தால் ஏரிக்கு நீர்வரத்து வரக்கூடிய வகையில் முறையான கட்டமைப்பு வசதியுடன் தடுப்பணை அமைப்பதற்கு வழிவகை செய்து கொடுத்திருப்போம் என்கிறார்கள். இந்த தடுப்பணைகளை கட்டும்போது கண்காணிக்க வேண்டிய அதிகாரிகளும் சரிவர பணிகளை கண்காணிக்க தவறிவிட்டனர். முறையாக திட்டமிடாமல் தடுப்பணைகளை கட்டியதால் எந்தவித பிரயோஜனமும் இல்லை. இதனால் மக்களின் வரிப்பணம்தான் வீணாகியுள்ளதாக விவசாயிகள் குமுறுகின்றனர்.

அகற்ற கோரிக்கை

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், திருவாமாத்தூர் பம்பை ஆற்றிலிருந்து முத்தாம்பாளையம் ஏரிக்கு வரும் வரத்து வாய்க்காலில் சுந்தரமடை ஓடை மற்றும் அயினம்பாளையத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதாரத்துறை அனுமதி பெறாமல் 2 தடுப்பணைகளை கட்டியுள்ளனர். இதனால் முத்தாம்பாளையம் ஏரிக்கு வரும் உபரிநீர், ஏரிக்கு வராமல் சுந்தரமடை ஓடை வழியாக மீண்டும் பம்பை ஆற்றுக்கே செல்லும் நிலை உள்ளது. எனவே அனுமதியில்லாமல் கட்டப்பட்ட தடுப்பணைகளை அகற்றுவதோடு, மக்கள் வரிப்பணத்தை வீணடித்தவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேநேரத்தில் ஏரியின் நீர்வரத்து வாய்க்கால் முழுவதையும் தூர்வாரி சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்