கார் மோதி மாணவர் பலி; காந்திகிராம பல்கலைக்கழக மாணவர்கள் காத்திருப்பு போராட்டம்

காந்திகிராம பல்கலைக்கழகம் எதிரே கார் மோதி மாணவர் பலியான சம்பவத்தை தொடர்ந்து, நான்கு வழிச்சாலையில் நடைமேம்பாலம் அமைக்க வலியுறுத்தி பல்கலைக்கழக மாணவர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

Update: 2023-08-25 21:30 GMT

காந்திகிராம பல்கலைக்கழகம் எதிரே கார் மோதி மாணவர் பலியான சம்பவத்தை தொடர்ந்து, நான்கு வழிச்சாலையில் நடைமேம்பாலம் அமைக்க வலியுறுத்தி பல்கலைக்கழக மாணவர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

மாணவர் சாவு

திண்டுக்கல்லை அடுத்த காந்திகிராமத்தில், காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு 3,500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில், இந்த பல்கலைக்கழகம் உள்ளது. இதனால் பல்கலைக்கழகத்துக்கு வரும் மாணவ-மாணவிகள் நான்கு வழிச்சாலையை கடந்து சென்று வருகின்றனர்.

இந்தநிலையில் பல்கலைக்கழகத்தில் பி.டெக்., (சிவில்) முதலாம் ஆண்டு படித்து வந்த நிலக்கோட்டை அருகே உள்ள சிறுநாயக்கன்பட்டியை சேர்ந்த வீரகார்த்திக் (வயது 19) என்ற மாணவர் கடந்த 21-ந் தேதி தேர்வு எழுதுவதற்காக காந்திகிராமத்துக்கு வந்தார்.

அப்போது அவர் பல்கலைக்கழகத்துக்கு செல்ல திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையை கடக்க முயன்றார். அந்த நேரத்தில் அவ்வழியாக வந்த கார் ஒன்று வீரகார்த்திக் மீது மோதியது.

இதில், படுகாயம் அடைந்த மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நான்கு வழிச்சாலையில் தடுப்பு கம்பிகள் இல்லாததால் இதுபோன்று உயிரிழப்புகள் ஏற்படுவதாக புகார் எழுந்தது.

பல்கலைக்கழகத்தில் போராட்டம்

இந்தநிலையில் மாணவர் உயிரிழந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த காந்திகிராம பல்கலைக்கழக மாணவர்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை பல்கலைக்கழகம் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் பல்கலைக்கழகம் செல்லும் சாலையில் ஊர்வலமாக சென்று, பல்கலைக்கழக நுழைவு வாயிலில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அம்பாத்துறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், போராட்டம் நடத்திய மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதுவரை 12 பேர் பலி

மாணவர்கள் தரப்பில் கூறும்போது, திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையை கடக்கும்போது இதுவரை நடந்த விபத்துகளில் மாணவர்கள் உள்பட 12 பேர் பலியாகி உள்ளனர். எனவே மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நான்கு வழிச்சாலையில் காந்திகிராமம் பிரிவில் நடை மேம்பாலம் அமைக்க வேண்டும். சாலையின் இருபுறமும் நிழற்குடை அமைக்க வேண்டும்.

மேலும் உடனடியாக சாலையில் இரும்பு கம்பிகளால் தடுப்புகள் அமைக்க வேண்டும். அத்துடன் மாணவர்கள் பல்கலைக்கழகம் வந்து செல்லும் காலை மற்றும் மாலை நேரங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

பேச்சுவார்த்தை

இதையடுத்து பல்கலைக்கழக நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காணலாம் என்று போலீசார் கேட்டுக்கொண்டனர். அதைத்தொடர்ந்து மாணவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக சென்று பல்கலைக்கழக நிர்வாக அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் பல்கலைக்கழக பதிவாளர் ராதாகிருஷ்ணன் (பொறுப்பு) தலைமையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் மற்றும் மாணவர் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

அப்போது உடனடியாக மாவட்ட கலெக்டரை சந்தித்து இதுகுறித்து முறையிடுவது என்றும், மத்திய அரசை அணுகி நான்கு வழிச்சாலையில் நடை மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. மேலும் சாலையில் தடுப்பு கம்பிகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று கூறப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட மாணவர்கள், தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மாணவர்களின் இந்த போராட்டத்தால் பல்கலைக்கழக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்