திருவொற்றியூர் சூறைமீன் மீன்பிடி துறைமுக பணிகள் டிசம்பரில் நிறைவடையும் - மத்திய மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா
திருவொற்றியூர் சூறைமீன் மீன்பிடி துறைமுக பணிகள் டிசம்பரில் நிறைவடையும் என மத்திய மீன்வளத்துறை மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா கூறினார்.
ஆய்வு கூட்டம்
மத்திய மீன்வளத்துறை மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா 'சாகர் பரிக்ரமா' என்ற திட்டத்தின் மூலம் கடல் வழியே பயணம் செய்து மீனவ மக்களை அவர்களின் கிராமத்துக்கு சென்று குறைகளை கேட்டு அறிந்து வருகிறார். அந்த வகையில் 9-வது கட்ட கடல் பயணத்தின் நிறைவு நாள் நிகழ்ச்சிகளை விழுப்புரம் மாவட்டம் அனுமந்தை மீனவ கிராமத்தில் நேற்று தொடங்கினார்.
பின்னர் செங்கல்பட்டு மாவட்டம் புதுப்பட்டினம், மாமல்லபுரம் மீனவ கிராமங்களில் மீனவர்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தார். அதைதொடர்ந்து சென்னை துறைமுகத்திற்கு சென்று தமிழக அரசு அதிகாரிகளிடையே ஆய்வு கூட்டம் மேற்கொண்டார். பிறகு திருவொற்றியூரில் ரூ.200 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் சூறைமீன் மீன்பிடி துறைமுக பணிகளை அவர் பார்வையிட்டார்.
மீனவர்கள் கோரிக்கை
பின்னர், சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுக மீனவ மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். மீனவர்களுக்கு கடன் அட்டை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.அப்போது அனைத்து மீனவ சங்கங்களின் தலைவர் நாஞ்சில் ரவி, காசிமேடு மீன் பிடித்துறைமுகத்தை மீன்வள பூங்காவாக மாற்ற வேண்டும். பாரம்பரிய மீன்பிடி மக்களை பழங்குடியினர் பட்டியலில் (எஸ்.டி.) சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட 17 வகையான கோரிக்கைகளை வலியுறுத்தி மனுவை அளித்தார்.
2021-ல் புயல் மழையால் சேதமடைந்த 91 படகுகளில் 81 படகுகளுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்ட நிலையில், எஞ்சிய 10 படகுகளுக்கு இதுவரை நிவாரணம் வழங்கவில்லை. எனவே நிவாரண உதவி உடனே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மீனவ சங்கத்தினர் முன் வைத்தனர்.
நிகழ்ச்சியில் மத்திய மீன்வளத்துறை மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா பேசியதாவது:-
95 சதவீதம் முடிவடைந்துள்ளது
ரூ.200 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் திருவொற்றியூர் சூறைமீன் மீன்பிடி துறைமுக பணிகள் 95 சதவீதம் முடிவடைந்துள்ளது. வருகிற டிசம்பர் மாதத்தில் முழு பணிகளும் நிறைவடையும். மீனவ மக்களுக்கு பெருமளவில் உதவி செய்ய வேண்டும் என்பதற்காக நாடு சுதந்திரம் பெற்ற பிறகு முதல் முறையாக மீனவர்கள் நலனுக்காக ஒரு தனித்துறையை பிரதமர் மோடி தொடங்கி உள்ளார்.
விவசாயிகளுக்கு கிஷான் கடன் அட்டை வழங்கப்படுவதை போன்று, ஆண்டுக்கு 7 சதவீத வட்டியில் மீனவ மக்களுக்கு கிஷன் கடன் அட்டை வழங்கப்பட்டு வருகிறது. உரிய நேரத்தில் கடனை திருப்பி தருபவர்களுக்கு 3 சதவீத வட்டி திருப்பி அளிக்கப்படுகிறது. டெல்லியில் இருந்து இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம், தமிழக மீனவர்கள் பயனடைவதை கண்டு எனது உள்ளம் மகிழ்ச்சி அடைகிறது.
தமிழ்நாடு முன்னணியில் இருக்கிறது
தமிழ்நாடு மீன்வளத்துறையில் முன்னணியில் இருக்கிறது. இறால் வளர்ப்பிலும் முன்னணியில் இருக்கிறது. நாடாளுமன்றத்தில் பசுமை தீர்ப்பாய சட்டத்தை மாற்றி அமைத்ததன் மூலம் இறால் வளர்ப்பு தொழில் தப்பியதாக தமிழக மீனவ மக்கள் என்னிடம் தெரிவித்தனர். தமிழகத்தில் கன்னியாகுமரியில் தொடங்கிய கடல் பயணத்தை சென்னை காசிமேட்டில் நிறைவு செய்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், மத்திய மந்திரியின் மனைவி சவிதாபென் ரூபாலா, வடசென்னை தொகுதி எம்.பி. கலாநிதி வீராசாமி, எம்.எல்.ஏ.க்கள் எபனேசர், ஐட்ரீம் மூர்த்தி, கே.பி.சங்கர், சென்னை துறைமுக ஆணையத்தின் தலைவர் சுனில் பாலிவால், மத்திய மீன்வளத்துறை செயலாளர் அபிலாஷ் லிக்கி, இணை செயலாளர் நீத்து பிரசாத், தமிழ்நாடு மீன்வளத்துறை இணை இயக்குனர் சந்திரா, சென்னை மீன்பிடி துறைமுக மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் சதீஷ்குமார், பி.சாம்பையன், எம்.சி.முனுசாமி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.