தலைஞாயிறு ஒன்றியத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும்ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தல்
தலைஞாயிறு ஒன்றியத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தலைஞாயிறு ஒன்றியத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ஒன்றியக்குழு கூட்டம்
நாகை மாவட்டம் தலைஞாயிறில் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ஒன்றியக்குழு தலைவர் தமிழரசி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செபஸ்தியம்மாள், அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-
முத்துலட்சுமி (அ.தி.மு.க.):- தலைஞாயிறு ஒன்றியம் பாங்கல் ஊராட்சியில் பணிகள் முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ள சுகாதார வளாகத்தை உடனடியாக திறக்க வேண்டும்.
ரம்யா (அ.தி.மு.க.):- பண்ணதெரு பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும்.
செல்வி (தி.மு.க.):- நீர்முளை பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும்.
அதிக நிதி
ஜெகதீஷ் (துணைத் தலைவர்):- அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் வெட்டப்படும் குளங்களின் அருகில் குழந்தைகளின் நலன் கருதி அபாயகரமான பகுதி என்று அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.
மகேந்திரன் (இந்திய கம்யூனிஸ்டு):- காடந்தேத்தி பகுதியில் சிறப்பு வாய்ந்த அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். இதனை கருத்தில் கொண்டு இந்த பகுதியில் சுகாதார வளாகம் ஒன்று கட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
கஸ்தூரி (தி.மு.க.):- வெள்ளப்பள்ளத்தில் புதிதாக சுகாதார நிலையம் கட்டித் தர வேண்டும்.
உதயகுமார் (தி.மு.க.):- தலைஞாயிறு ஒன்றியத்துக்கு அதிக நிதி பெறுவதற்கு, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து மாவட்ட கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க வேண்டும்.
மாசிலாமணி (தி.மு.க.):- கோவில் பத்து பகுதியில் புதிதாக கிராம நிர்வாக அலுவலகம் கட்டித்தர வேண்டும்.
ஞானசேகரன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு):-
கடந்த பல ஆண்டுகளாக கொத்தங்குடி தொழுதூர் பகுதிகளில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தீபா (அ.தி.மு.க.):- அவரிக்காடு பகுதியில் கான்கிரீட் பாலம் அமைக்க வேண்டும்.
தமிழரசி (தலைவர்):- உறுப்பினர்களின் கோரிக்கைகள் நிதிநிலைக்கு ஏற்ப படிப்படியாக நிறைவேற்றப்படும்.
முடிவில் மேலாளர் மணிமுத்து நன்றி கூறினார்.