தொழிற்சங்க நிர்வாகிகள் உண்ணாவிரத போராட்டம்

திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் இரட்டை ஊதிய முறையை கைவிட வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

Update: 2023-08-10 18:53 GMT

உண்ணாவிரத போராட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் கேத்தாண்டப்பட்டியில் திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையின் நுழைவு வாயிலில் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. சர்க்கரை ஆலை நிர்வாகக் குழு தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கி உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்தார். அண்ணா தொழிற்சங்க மாநில பேரவை தலைவர் (சர்க்கரை பிரிவு) திருப்பதி, ஐ.என்.டி.யு.சி. மாநில பேரவை பொருளாளர் (சர்க்கரை பிரிவு) தங்கராஜ், பாட்டாளி தொழிற்சங்கம் தலைவர் அன்பழகன் மற்றும் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றனர்.

இரட்டை ஊதிய முறை

உண்ணாவிரத போராட்டத்தில் ஒரே நிறுவனத்தில், ஒரே துறையில் பணியாற்றி வரும் ஊழியர்களின் இரட்டை ஊதிய முறையை கைவிட்டு அனைவருக்கும் ஒரே மாதிரியான, அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.

கடந்த 12 வருடங்களாக ஊதிய பேச்சு வார்த்தையை முடிவு செய்யாமல் தொழிலாளர்களின் ஊதியம் மிகக் குறைவாக இருப்பதை பற்றி சிறிதும் கவலைப்படாமல் காமன் கேடர் ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு ஊதியம் வழங்க சர்க்கரைத் துறை ஒரு குழுவை அமைத்தது. தொழிலாளர்களின் கோரிக்கையை பரிசீலனை செய்து அரசுக்கு உரிய பரிந்துரை செய்ய அமைக்கப்பட்ட குழு இது நாள் வரை பேசியதற்கு மாறாக முற்றிலும் மாறுபட்ட தவறான பரிந்துரையை அமல்படுத்த முயல்வது ஏன்?.

கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வரும் தினக்கூலி தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பின் படி திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நிரந்தரப்பணி வழங்காமல் நிலுவையில் உள்ள 24 தினக்கூலி பணியாளர்களுக்கு உடனே பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

இது குறித்து தகவல் அறிந்து வந்த நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார், உண்ணாவிரதம் இருந்தவர்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்