பஸ் மோதி ஒன்றிய கவுன்சிலரின் கணவர் பலி
பஸ் மோதி ஒன்றிய கவுன்சிலரின் கணவர் பலி
பட்டுக்கோட்டையில், பஸ் மோதி ஒன்றிய கவுன்சிலரின் கணவர் பலியானார்.
ஒன்றிய கவுன்சிலரின் கணவர்
பட்டுக்கோட்டை தாலுகா வாட்டாத்திக் கொல்லைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(வயது 62). இவர், கிராம உதவியாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி அமிர்தவல்லி. இவர் பேராவூரணி ஒன்றிய கவுன்சிலராக இருந்து வருகிறார்.
நேற்று காலை 7 மணி அளவில் கோவிந்தராஜும், அவருடைய உறவினர் இடையாத்தி கிராமத்தை சேர்ந்த சத்துணவு அமைப்பாளர் பெரியதம்பி என்பவரும் நாகப்பட்டினம் செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து புறப்பட்டு வந்தனர்.
பஸ் மோதி பலி
பட்டுக்கோட்டை தாசில்தார் அலுவலகம் எதிரில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு எதிரே உள்ள கடையில் ஜெராக்ஸ் எடுத்துவிட்டு வந்து மீண்டும் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றனர். மோட்டார் சைக்கிளை பெரியதம்பி ஓட்டினார். பின்புறம் கோவிந்தராஜ் அமர்ந்து இருந்தார்.
அப்போது பட்டுக்கோட்டையில் இருந்து வேதாரண்யம் சென்ற அரசு பஸ், பெரியதம்பி ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி எறியப்பட்டு கீழே விழுந்த கோவிந்தராஜ் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த பெரிய தம்பி பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து பட்டுக்கோட்டை நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.