தஞ்சை யூனியன் கிளப் முழுமையாக மாநகராட்சி வசமானது
மதுரை ஐகோர்ட்டில் சாதகமாக வந்த தீர்ப்பினால் ரூ.75 கோடி மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டதையொட்டி தஞ்சை யூனியன் கிளப் முழுமையாக மாநகராட்சி வசமானது.
தஞ்சாவூர்;
மதுரை ஐகோர்ட்டில் சாதகமாக வந்த தீர்ப்பினால் ரூ.75 கோடி மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டதையொட்டி தஞ்சை யூனியன் கிளப் முழுமையாக மாநகராட்சி வசமானது.
யூனியன் கிளப்
தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே 150 ஆண்டுகள் பழமையான யூனியன் கிளப் கட்டிடம் உள்ளது. இந்த கிளப்புக்கு ஆவணங்கள் எதுவும் முறையாக இல்லாத நிலையில் சிலர் ஆக்கிரமிப்பு செய்ததாக புகார் எழுந்தது.இதனால் ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற்றுதல் சட்டத்தின் கீழ் கட்டிடத்தில் இருந்த பொருட்களை அகற்றி கொள்ளுமாறு யூனியன் கிளப் நிர்வாகிகளுக்கு மாநகராட்சி அலுவலர்கள் கடந்த 2021-ம் ஆண்டில் அறிவுறுத்தினர். ஆனால், இந்த இடம் காலி செய்யப்படாமல் இருந்ததால், அடுத்த சில வாரங்களில் மாநகராட்சி அலுவலர்கள் கையகப்படுத்தினர்.
சாதகமான தீர்ப்பு
தஞ்சை மாநகராட்சியின் இந்த முடிவை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டில் யூனியன் கிளப்பு நிர்வாகம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு மாநகராட்சிக்கு சாதகமாக வந்தது. இதையடுத்து நேற்றுமதியம் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், உதவி செயற்பொறியாளர் ராஜசேகரன் மற்றும் அதிகாரிகள் யூனியன் கிளப்புக்கு சென்று கட்டிடங்களை பார்வையிட்டு அதன் உறுதி தன்மை குறித்து ஆய்வு செய்தனர். பின்னர் இந்த இடம் மாநகராட்சிக்கு சொந்தமானது என்ற வாசகம் அடங்கிய நோட்டீசு ஒட்டப்பட்டது. மேலும் மாநகராட்சிக்கு சொந்தமானது என அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது. ஏற்கனவே 40 ஆயிரம் சதுரஅடி நிலம் மீட்கப்பட்ட நிலையில் தற்போது 35 ஆயிரம் சதுரஅடியும் மீட்கப்பட்டு, யூனியன் கிளப் முழுமையும் மாநகராட்சி வசம் வந்துள்ளது.
மக்கள் கருத்து கேட்கப்படும்
இது குறித்து மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் நிருபர்களிடம் கூறும்போது, தஞ்சை மாநகரின் மையப்பகுதியில் யூனியன் கிளப் இயங்கி வந்தது.150 ஆண்டுகால பழமையான கட்டிடம் ஆகும். மாநகராட்சி நிர்வாகம் சார்பில் யூனியன் கிளப் கையகப்படுத்தப்பட்டது. இதை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கின் தீர்ப்பு மாநகராட்சிக்கு சாதகமாக வந்துள்ளது.இதன் மொத்த பரப்பளவு 35 ஆயிரம் சதுர அடி ஆகும். இவற்றின் மதிப்பு ரூ.60 கோடி முதல் ரூ.75 கோடி வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மீட்கப்பட்ட யூனியன் கிளப் கட்டிடத்தில் அடுத்து என்ன செய்யலாம் என ஆணையர், கவுன்சிலர்கள் கலந்து பேசி முடிவு செய்யப்படும். பொது மக்களிடம் கருத்து கேட்கப்படும். தற்போது கட்டிடத்தின் உறுதி தன்மை குறித்து ஆய்வு செய்து வருகிறோம் என்றார்.