ஊராட்சி குப்பை கிடங்கால் சுகாதார சீர்கேடு

கணியூர் போலீஸ் நிலையம் அருகில் அமைந்துள்ள குப்பைக் கிடங்கால் சுகாதார சீர்கேடுகள் ஏற்படும் நிலை உள்ளது.

Update: 2023-08-25 16:53 GMT

போடிப்பட்டி,

மடத்துக்குளத்தையடுத்த கணியூர் போலீஸ் நிலையம் அருகில் அமைந்துள்ள குப்பைக் கிடங்கால் சுகாதார சீர்கேடுகள் ஏற்படும் நிலை உள்ளது.

குப்பைக் கிடங்கு

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

மடத்துக்குளம் ஒன்றியத்துக்குட்பட்ட ஜோத்தம்பட்டி ஊராட்சி பகுதிகளில் சமீப காலங்களாக குப்பைகளைக் கையாள்வது மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. ஊராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கு அமைந்திருந்த பகுதியில் கணியூர் போலீஸ் நிலைய கட்டிடம் கட்டப்பட்டது. இதனால் அந்த பகுதியிலிருந்து குப்பைக் கிடங்கை அப்புறப்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து குப்பைக் கிடங்கு அகற்றப்பட்டது. அன்றுமுதல் குப்பை கொட்ட இடம் இல்லாமல் அலைமோதும் நிலை ஏற்பட்டது. இதனால் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலையோரங்களிலும் முக்கிய இடங்களிலும் குப்பைகள் குவிந்து கிடந்ததால் சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஜோத்தம்பட்டி ஊராட்சியில் சேகரமாகும் குப்பைகளை கணியூர் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் கொண்டு வந்து கொட்டினர். இதற்கு பேரூராட்சி நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்ததுடன் அந்த வழித்தடத்தில் தடுப்பு அமைத்தது. இதனால் கணியூர் பஸ் நிலையத்துக்கு எதிரில் வணிக நிறுவனங்களுக்கு முன்பாக ஊராட்சி பணியாளர்கள் மூலம் குப்பைகள் கொட்டியதால் கடும் கண்டனத்துக்கு ஆளானார்கள்.மேலும் குப்பை கொட்ட இடம் ஒதுக்கக் கோரி மாவட்ட கலெக்டர் உள்ளிட்டவர்களிடம் ஊராட்சித் தலைவர் மனு அளித்தார்.

திடக்கழிவு மேலாண்மை

தற்போது மீண்டும் கணியூர் போலீஸ் நிலையம் அருகில் ஊராட்சிப் பணியாளர்கள் மூலம் குப்பைகளை கொட்டத் தொடங்கியுள்ளனர். இதனால் அந்த பகுதி முழுவதும் குப்பைகள், மலை போல குவிந்துள்ளது. மேலும் கடும் துர்நாற்றம் வீசுவதால் போலீஸ் நிலையத்தில் உள்ள போலீசார் மட்டுமல்லாமல் அங்கு வரும் பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர். மழைக்காலங்களில் இந்த குப்பைமலையால் கடுமையான சுகாதார சீர்கேடுகள் ஏற்படும் அபாயம் உள்ளது.மேலும் கொசுத் தொல்லையால் அவதிப்படுவதுடன் மலேரியா, டெங்கு உள்ளிட்ட கடுமையான நோய்த்தொற்றுகளுக்கும் போலீசார் ஆளாகும் நிலை உள்ளது.திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்த ஊராட்சி நிர்வாகம் தவறுவதே இத்தகைய பிரச்சினைகளுக்கெல்லாம் மூல காரணமாக உள்ளது. 

அதற்கு மாற்றாக குப்பைகளுக்கு தீ வைத்துக் கொளுத்துவதன் மூலமே குப்பைகளை குறைக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.இதனால் காற்று மாசு ஏற்படுவதுடன் பல்வேறு சுவாசக்கோளாறுகளும் ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை முறையாக செயல்படுத்தவும், குப்பைகளை கொட்டுவதற்கு ஒதுக்குப்புறமான பகுதியில் குப்பைக் கிடங்கு உருவாக்கவும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்'என்று சமூக ஆர்வலர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்