வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அரசின் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் அரசின் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2023-09-13 19:15 GMT


வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் அரசின் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

அரசின் உதவித்தொகை

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் உயிர்ப்பதிவேட்டில் காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் இளைஞர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்களின் கல்வித்தகுதிகளை பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு செய்திருக்க வேண்டும். தொடர்ந்து பதிவினை புதுப்பித்து இருக்க வேண்டும்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், ஏனையோர் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000 மிகாமல் இருத்தல் வேண்டும். அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்கு சென்று பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட மாட்டாது. தொலைதூர கல்வி அல்லது அஞ்சல் வழி மூலம் கல்வி கற்பவர்கள் உதவித் தொகை பெறலாம்.

விண்ணப்பிக்கலாம்

இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவதற்கு மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு கிடையாது. மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை உதவித் தொகை வழங்கப்படுகிறது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு நிறைவு பெற்ற மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், அரசின் வேறு உதவித்தொகை எதுவும் பெறுதல் கூடாது. இந்த உதவித்தொகை பெறுவதற்கு தகுதி உள்ளவர்கள் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு அனைத்து கல்வி சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வந்து இலவசமாக விண்ணப்பம் பெற்று கொள்ளலாம்.

விண்ணப்பங்கள் அனைத்து வேலை நாட்களிலும் வழங்கப்படும். மேலும் உதவித்தொகை பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. எனவே, இத்திட்டத்தின் கீழ் இதுவரை உதவித்தொகை பெறாத தகுதியான இளைஞர்கள் விண்ணப்பத்தினை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பத்தை அலுவலகத்தில் வேலை நாட்களில் நேரில் சமர்ப்பித்து பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்